Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, September 6, 2023

அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் இருக்கும் எம்பிபிஎஸ் இடங்களை திரும்பப்பெற நடவடிக்கை - மருத்துவக் கல்வி இயக்குநரகம் தகவல்

அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் இருக்கும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை திரும்ப பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி மாணவர் தேர்வுக்குழு செயலாளர் ஆர்.முத்துச்செல்வன் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023-24-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான இரண்டு சுற்று கலந்தாய்வு சமீபத்தில் நிறைவடைந்தது. இரண்டாம் சுற்று கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்றவர்கள் செப்டம்பர் 4-ம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள், அவர்களின் பெற்றோர் கோரிக்கையை ஏற்று கல்லூரிகளில் சேருவதற்கான காலஅவகாசம் செப்டம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் மருத்துவக் கல்வி மாணவர் தேர்வுக்குழு செயலாளர் ஆர்.முத்துச்செல்வன் கூறுகையில், 'எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இரண்டு கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான காலஅவகாசம் செப்டம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் வரும் 8-ம் தேதி வெளியாகவுள்ளது.

அதன் பின்னர், தமிழகத்தில் காலியாகவுள்ள இடங்களுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும். அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால், அதனை திரும்பபெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

No comments:

Post a Comment