காலணியை எடுக்க முயன்ற போது, சரக்கு ரயில் வந்ததால் தண்டவாளத்தில் படுத்து, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உயிர் தப்பினார்.
சித்ரதுர்கா அருகே பி.துர்கா கிராம அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஷிவ்குமார், 45. சொந்த வேலையாக பெங்களூரு செல்ல, இன்டர்சிட்டி ரயிலில் முன்பதிவு செய்திருந்தார். நேற்று காலை 8:30 மணிக்கு தாவணகெரே ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடைக்கு வந்தார். ஆனால், ரயில் இரண்டாவது நடைமேடையில் வந்தது.
இதனால் முதலாவது நடைமேடை தண்டவாளத்தில் இறங்கி, இரண்டாவது நடைமேடைக்கு செல்ல முயன்றார். அப்போது அவரது காலணி தண்டவாளத்தில் விழுந்தது. அதை எடுத்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் அந்த தண்டவாளத்தில், சரக்கு ரயில் வேகமாக வந்தது. அதிர்ச்சி அடைந்தவர் உயிரை காப்பாற்றி கொள்ள, தண்டவாளத்தின் நடுவில் படுத்து கொண்டார்.
இதைப் பார்த்த இன்ஜின் டிரைவர் 'பிரேக்' போட்டு, ரயிலை நிறுத்த முயன்றார். ஆனாலும் ஷிவ்குமாரை கடந்து சென்ற பின், ரயில் நின்றது. இதில், ஷிவ்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
அவரை ரயில்வே பாதுகாப்பு போலீசார், பயணியர் இணைந்து மீட்டனர். காயம் அடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment