Monday, September 18, 2023

மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் திங்கள்கிழமை(செப்.18) முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்திற்காக மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற 24.7.2023 முதல் 4.8.2023 வரை முதல் கட்டமாகவும், 5.8.2023 முதல் 14.8.2023 வரை இரண்டாவது கட்டமாகவும், மேற்சொன்ன இரண்டு கட்டங்களிலும், விடுபட்டவர்களுக்கு 18.8.2023 முதல் 20.8.2023 வரை சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தகுதி இல்லாத சுமார் 56 லட்சத்து 50 ஆயிரம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான வெள்ளிக்கிழமை (செப்.15) காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முழுவதும் 1.06 கோடி மகளிர் பயன்பெறும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தார். | விநாயகர் சதுர்த்தி: புலியகுளம் விநாயகர் சிலைக்கு 4 டன் மலர்களால் அலங்காரம்!

இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தல் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதாவது, விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18.9.2023 முதல் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாள்களுக்குள் தீர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மகளிர் உரிமைத் திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் திங்கள்கிழமை(செப்.18) முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம். இதில் மேல்முறையீடுகள், அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, மேல்முறையீட்டு அலுவலராகச் செயல்படும் வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களை விசாரணை செய்வார். தகுதியான நபர்களுக்கு 30 நாள்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News