Join THAMIZHKADAL WhatsApp Groups
சென்னை மாநகராட்சி சார்பில் டிரஸ்ட்புரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு இலவச மஞ்சப்பை வழங்கப்பட்டது.
சென்னை தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன் பங்கேற்றார். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள், அதற்கு மாற்றாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துவது குறித்து அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து, ‘அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம்’ என்று மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர், உத்கர்ஷ் குளோபல் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு 350 மஞ்சப்பைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் டி.ராமஜெயம், உத்கர்ஷ் அமைப்பை சேர்ந்த ஆர்.டீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment