Join THAMIZHKADAL WhatsApp Groups
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள தங்களிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சொந்த செலவில் கணித கணினி ஆய்வகம் அமைத்து ஏழை, எளிய மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் பாடம் நடத்தி வருகிறார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே குள்ளஞ்சாவடியை அடுத் துள்ளது தங்களிக்குப்பம் கிராமம். இக்கிராமத்தில் சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. மிகவும் உள் கிராமத்தில் அமைந்துள்ள இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 143 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமையாசிரியர் உட்பட 7 ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். 6,7,8-ம் வகுப்புகளில் 77 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக ராஜலட்சுமி பணிபுரிந்து வருகிறார். இவர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய கல்வி போல ஏழை, எளிய மாணவர்கள் படிக்கும் ஒன்றிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கணினி மூலம் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். இதை நடைமுறைப்படுத்தும் வகையில், அவரது சொந்த செலவில் ரூ.3 லட்சம், அவரது நண்பர்கள் மூலம்கிடைத்த ரூ. 1 லட்சம் என ரூ. 4 லட்சத்தில் பள்ளியில் கணினி கணித ஆய்வகத்தை தனியார் நிறுவன உதவியுடன் அமைத்துள்ளார்.
இதில் 25 கம்ப்யூட்டர்கள், ஒரு ஸ்மார்ட் போர்டுடன் கணினி ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த2021-ம் ஆண்டு முதல் 6, 7, 8 வகுப்பு மாணவ, மாணவிகள் கணித வகுப்பை கணித கணினி ஆய்வகத்தில் தான் படித்து வருகின்றனர். ஆசிரியை ராஜலட்சுமியின் இந்த நடவடிக்கைக்கு கிராம மக்கள், கல்வித் துறை அதிகாரிகள், சமூக ஆவலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியை ராஜலட்சுமி கூறுகையில், "அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என நினைத்தேன். அதற்கான முயற்சி தான் இது. இப்போது இந்த மாணவர்கள் கணினியில் படிக்கும் போது அவர்களின் கற்றல் திறன் அதிகமாக உள்ளது. கணினியில் கணக்கு பாடத்தை போடும் போது, ஒரு கணக்கை முடித்தால் தான் அடுத்த கணக்குக்கு போக முடியும். கரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது" என்றார்.
No comments:
Post a Comment