Join THAMIZHKADAL WhatsApp Groups
தொழுவதற்கு எளிய விநாயகப்பெருமானின் வழிபாட்டில் தோப்புக்கரணம் போடுவது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் முதற்கொண்டு வேலைக்குச் செல்லும் ஆண் - பெண் எனப் பலரும் போகும் வழியில் ஒரு பிள்ளையார் கோயிலைக் கண்டால் பாவனையாக காதுகளைப் பிடித்துக் கொண்டு பக்தியோடு தோப்புக் கரணம் போட்டுவிட்டுச் செல்வதைக் காணலாம். இந்த வழக்கம் எப்படி வந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஒருசமயம் ஸ்ரீ மஹாவிஷ்ணு கயிலாயத்தில் சிவபெருமானைக் காண வருகிறார். அங்கேயிருந்த பிள்ளையார் மகாவிஷ்ணுவின் கையில் இருந்த சக்கரத்தை வாங்கி விளையாடுகிறார். அப்படியே விளையாட்டுப் போக்கில் அதை தனது வாயில் போட்டுக் கொண்டு விடுகிறார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஸ்ரீ மகாவிஷ்ணு தனது சக்கரத்தை எப்படி குழந்தை பிள்ளையாரிடமிருந்து திரும்பப் பெறுவது என்று யோசித்து, அவர் எதிரே நின்று தனது நான்கு கரங்களினாலும் தம் காதுகளைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்து அவருக்கு விளையாட்டு காண்பிக்கிறார். இதைக் கண்டு ஆர்ப்பரித்துச் சிரித்த பிள்ளையாரின் வாயிலிருந்து மகாவிஷ்ணுவின் சக்கரம் கீழே விழ, அதை ஸ்ரீ மகாவிஷ்ணு எடுத்துக் கொண்டதாகப் புராணம் கூறுகிறது.
'தோர்பி' என்று கரங்களால் 'கரணம்' என்னும் காதுகளைப் பிடித்துக் கொண்டு விஷ்ணு செய்த விளையாட்டே பின்னர் 'தோர்பி கரணம்' என்று சொல்லப்பட்டு, அதுவே மருவி, 'தோப்புக்கரணம்' ஆயிற்று. முதன் முதலில் விநாயகர் எதிரே தன் காரியம் நிறைவேற, 'தோப்புக்கரணம்' போட்டவர் ஸ்ரீ மஹாவிஷ்ணுதான். இன்றும் பக்தர்கள் தங்கள் காரியங்கள் நிறைவேற வேண்டியும், தாம் அறியாமல் செய்து தவறுகளை மன்னிக்க வேண்டியும் பிள்ளையாருக்கு எதிரே நின்று நூற்றுக்கணக்கில் தோப்புக்கரணங்கள் போடுவதைக் காண்கிறோம்.
No comments:
Post a Comment