Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, September 26, 2023

நோட்டாவை நோக்கி நகரும் ஆசிரியர்களைத் தன்வயப்படுத்துமா விடியல் ஆட்சி?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பொதுவாகவே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திமுக தலைமையிலான அரசு எப்போதும் வாரி வழங்குவதாக ஒரு பேச்சு இங்குண்டு. அதிலும் குறிப்பாக ஆசிரியர்களுக்கு திமுக தலைமையிலான அரசு பல்வேறு சலுகைகளைக் கொட்டிக் கொடுப்பதாகப் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு கருத்து ஆழ வேரூன்றி இருப்பது மறுப்பதற்கில்லை. அதன் காரணமாகவே ஆசிரியர்கள் வாக்குகள் திமுகவிற்கே என்ற எண்ணம் பிற கட்சிகளிடம் காணப்படுவது மலிந்துள்ளது. இந்தக் கூற்று மிகவும் தவறானது. இத்தகைய தவறான உண்மைக்குப் புறம்பான கருத்து காரணமாக ஆசிரியர்கள் அனுபவித்து வரும் இன்னல்கள் ஏராளம்.

இதன் காரணமாகவே, அஇஅதிமுக தலைமை உள்ளிட்ட எவருக்கும் ஆசிரியர்கள் மீது எப்போதும் முழுதாக நம்பிக்கை இருப்பதில்லை. வேண்டா வெறுப்பாகத்தான் அவர்கள் ஆட்சியில் இருக்கும் காலக்கட்டங்களில் கிள்ளிக் கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

இதன் உச்சகட்டமாக 2003 இல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர் பெருமக்கள் அனைவரையும் ஒற்றைக் கையெழுத்தில் ஒருசேர பணிநீக்கம் செய்து ஆணைப் பிறப்பித்த கருப்பு நாளை யாரும் மறப்பதற்கில்லை. இவர்களால் தமக்கு எந்தவொரு பயனும் இல்லை என்கிற ஆழ்மன வெறுப்புணர்ச்சியே அதற்குரிய காரணமாகக் கருதிக் கொள்ள நிறைய வாய்ப்புண்டு.

அரசியல் சார்பற்ற நிலையில் எந்த ஆட்சி குறித்தும் இது நம் ஆட்சி என்று கவலை கொள்ளாமல் பொதுவான ஆசிரியர் இயக்கங்களுக்குள் அடையாள அரசியல் மற்றும் கட்சி சார்பு மனநிலையை விதைத்து தலைமைப் பதவி ஆசையுடன் ஊசலாடிய நபர்களை வலைவிரித்து ஒட்டுமொத்த ஒற்றுமைக்கு உலை வைக்கும் விதமாக ஆசிரியர் இயக்கத்தை உடைத்ததில் திமுக மற்றும் இடதுசாரி இயக்கங்களுக்கு நிறைய பங்குண்டு.

தமிழக அளவில் குறிப்பாக திமுகவிற்கு வலுவான இயக்கமாக ஆசிரியர் மன்றம் ஒன்று இருப்பது போல் ஆசிரியர்கள் மத்தியில் அஇஅதிமுக சார்புடைய ஓர் இயக்கத்தை வலுவானதாகக் கட்டமைக்க இன்று வரை இயலவில்லை என்பதே உண்மை.

அரசு ஊழியர் இயக்கங்கள் பலவும் இன்றும் கூட தேசிய, மாநில கட்சிகள் சார்புடையவையாக உள்ளது அறியத்தக்கது.

அதேவேளையில் ஆசிரியர் இயக்கங்களுக்குள் இந்த நிலை இல்லை. திமுக மற்றும் சிபிஎம் கட்சி சார்ந்த ஒரு சில ஆசிரியர் இயக்கங்களைத் தவிர, பெரும்பாலான ஆசிரியர் இயக்கங்கள் இப்போது வரை கட்சி சார்பற்று பொதுவானவையாக துணிந்து திடமுடன் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

இதுபோன்ற கட்சி சார்புடைய இயக்கங்கள் தமிழக அரசியல் வரலாற்றில் பெரிதாக எதையும் சாதித்ததாகத் தெரியவில்லை. நம்பும்படியாக எதையெதையோ சொல்வார்கள். ஆனால் எதுவும் உண்மையல்ல. எந்த மயிலாவது தாமாக இறகொன்றை இரந்து கேட்பவருக்குக் கொடுத்து விடுமா என்ன?

தன்னலத்திற்காகப் பொதுநலத்தைப் பணயம் வைத்த துரோக வரலாறே ஆசிரியர் போராட்ட களத்தில் வழிநெடுகக் காணப்படுவது வருந்தத்தக்கது. வேதனைக்குரியதும் கூட. இந்த ஆசிரியர் இயக்க உடைப்பு வேலை இன்றும் தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி சார்ந்த ஆசிரியர் அமைப்புகளின் ஒவ்வொரு நிலையிலும் தொடர்வதைக் காண சகிக்கவில்லை. கடந்த காலங்களில் பல்வேறு கோரிக்கைகளை வென்றெடுத்த போராட்ட களங்கள் அண்மைக்காலமாகப் பிசுபிசுத்து வெறும் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் போக்கிடமாக ஆகிப் போனதற்கு தனிமனித பதவி வெறியும் கண்மூடித்தனமாக நம்பும் கட்சி மோகமும் முக்கிய காரணங்கள் ஆகும்.

திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக வாய்விட்டுச் சொல்லவும் முடியாமல் கட்சி அபிமானத்திலிருந்து விட்டு விலகவும் இயலாமல் தணலில் மாட்டிய பிஞ்சு உயிராக அண்மைக்காலத்தில் கட்சி சார்ந்த ஆசிரியர் அமைப்புகளின் நிலையுள்ளது. இஃது ஆசிரியர்களின் பெரும் துயரம் ஆகும். வெறுப்பு மிகுந்த எதிரியை எதிர்த்து இழப்பதற்கு இனி எதுவுமில்லை, அடைவதற்கு ஓர் இலக்கு இருக்கின்றது என்று உயிரைக் கொடுத்து போராட முடியும். அன்பிற்கினிய பச்சைத் துரோகியுடன் இனி எவ்வளவு காலத்திற்கு மறத்துப்போன ஆன்மாவுடன் கைகோர்த்து நடைபோடுவது என்று அல்லாடித் தவிக்கும் ஆசிரியர் இயக்கவாதிகள் மிகவும் பரிதாபத்திற்குரியவர்களாக இருப்பது கொடுமையானது.

முன்பு போல் இப்போது யாரையும் அவ்வளவு எளிதாக அதிக காலம் ஏமாற்ற முடியாது. இதை எளிய அணுகுமுறையையும் தியாக உணர்வையும் கட்சி சார்பில்லாத போராட்ட குணத்தையும் காலில் போட்டு மிதித்து பக்கா பகட்டுக் கட்சிக்கார அரசியல்வாதி போல் ஆகிவிட்ட வெள்ளையும் சொள்ளையும் பளிச்சிடும் ஆசிரியர் தலைமை உணருதல் அவசியம். முகத்திற்கு நேராக எதிர்த்துக் கேள்வி கேட்க துணிவற்ற பலரும் தம் முதுகிற்கு பின் காரித் துப்புவது குறித்து சிந்திப்பது நல்லது.

அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட நிலையில் இன்றைய ஆசிரியர்கள் நிலையுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த கால ஆட்சியாளர்கள் மேற்கொண்ட ஆசிரியர் விரோத வடுக்களுக்குத் தீர்வாக விடியல் அரசைத் துணையாகக் கொண்டது மறைப்பதற்கில்லை. பழைய ஓய்வூதியம், சம வேலைக்குச் சம ஊதியம், ஊதிய முரண்பாடுகள் களைதல், பகுதிநேர ஆசிரியர்களுக்குக் கடந்த காலத்தைப் போன்று காலமுறை ஊதியம் வழங்குதல், பழைய ஊக்க ஊதியம், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை மீண்டும் விடுவித்தல் முதலானவற்றிற்கு விடிவுகாலம் பிறக்கும் என்று நம்பி இருந்தவர்களுக்குக் கிடைத்தது என்னவோ பெருத்த ஏமாற்றம் மட்டுமே என்றால் மிகையில்லை.

அதாவது இருண்ட வாழ்விலிருந்து மீள முடியா நரக வாழ்வில் தாமாகவே போய்விழுந்த குற்ற உணர்வில் ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் ஆசிரியரும் உழல்வதாக அறியப்படுகிறது.

விளம்பரங்கள் பள்ளிக்குத் தேவை தான். ஆனால், வெற்று விளம்பரங்களால் கல்வி பாழாக்கப்படுவதை எவராலும் ஏற்கவியலாது. கற்பித்தலை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு இணையத்தோடும் பதிவேடுகளோடும் நொடிகள் தோறும் மல்லுக்கட்டும் முழுநேர வேலையில் ஆசிரியர்களின் ஆவி போவதைத் தடுத்து நிறுத்த வேண்டியது அனைவரின் முழுமுதற் கடமையாக உள்ளது. முதன்மையானதும் பயன்மிக்கதும் ஆசிரியர் நலனுக்கு உகந்ததுமான பல்வேறு கோரிக்கைகளும் ஆழ்கடலில் கொண்டு போய் போடப்பட்டவையாகவே இன்றுவரை காணப்படுகின்றன. ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு. வந்த பிறகு வேறு பேச்சு என்பதில் ஆசிரியர்களுக்கு எப்போதும் உடன்பாடில்லை. பழைய கொடிய பிசாசுகளுடன் போராடிக் கொண்டிருக்கும் அப்பாவி ஆசிரியச் சமூகத்தை அதிலிருந்து விடுவிக்காமல் மேலும் புதிய புதிய பேய்களை ஏவிவிட்டு வேடிக்கைப் பார்ப்பது என்பது கொடுமையானது.

ஆம். எண்ணும் எழுத்தும், கிணற்றைத் தேடி அலைந்த கதையாக உயிரை மாய்க்கும் இணைய வழி மதிப்பீட்டு முறைகள் மற்றும் ஆய்வு படையெடுப்புகள், பதவி உயர்வுகள் கலந்தாய்வைக் கொள்கை முடிவெடுத்து நடத்துவதில் காலம் தாழ்த்துதல், அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க அறிவுறுத்துதல், மறைமுகமாக காலை உணவுத் திட்டம் வாயிலாக ஆசிரியர் பெருமக்களை 12 மணிநேரம் உழைக்க வைக்க மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை ஏவிவிடுதல் முதலான புத்தம் புதிய பிசாசுகளுடன் போராடி உடல் மற்றும் உள நலன் கெட்டு, சுயமரியாதை இழந்து, அகால மரணம் அடையும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது இன்றியமையாதது.

இத்தகைய சூழலில், இந்திய துணைக்கண்ட ஒன்றிய அளவில் திராவிட மாடல் அரசின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மக்கள் நலத்திட்ட உதவிகளையும் தொலைநோக்கு சிந்தனைகளையும் முன்னெடுக்கும் முன்முயற்சிகள் அனைத்திலும் உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நலன்கள் காக்கப்பட தோள்கொடுப்பது அரசின் கடமையாகும்.

இன்றைய பாசிச, மதவாத, வெறுப்பு அரசியல் மற்றும் அவற்றின் அனைத்து மக்கள் விரோத மற்றும் குரோத செய்கைகளுக்குத் தவழ்ந்து தலையாட்டும் திராணியற்று திராவிடத்தை முழுக்குப் போட்டு தலைமை குழப்பம் நிலவும் கைப்பாவை அரசியல் மீது பின்தொடரும் நோக்கும் போக்கும் ஆசிரியர்கள் மத்தியில் இருப்பதாகத் தோன்றவில்லை. இந்த நிலையில் திமுகவை விட்டாலும் ஒர் அமைதியும் இணக்கமும் குறைந்தபட்ச மகிழ்ச்சியும் அனைத்துத் தரப்பினருக்கும் கிடைத்திட வேறு கதியில்லை என்பதே நடப்பியல் ஆகும்.

அதேவேளையில், நம்பகமும் நம்பிக்கையும் நிறைந்த விடியல் அரசு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் 100 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று தம்பட்டம் அடிப்பதை நினைத்து ஆசிரியர்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கத்தான் வேண்டியுள்ளது. விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஆசிரியர்களும் அவர்களது குடும்பத்தினர்களும் தம் நியாயமான எதிர்ப்பை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அச்சுறுத்தும் சனாதனமும் போலியான சமூகநீதிக் கூட்டணியும் வேண்டவே வேண்டாம் என்று நோட்டாவை நோக்கி நகரும் அபாயகரமான சூழலைத் தடுத்து நிறுத்தி சரிந்து இருள் கவிந்த பாதாளத்தில் விழும் இழந்த நம்பிக்கையின் மீது சூரியனின் கதிர்கள் விழுந்து புதியதொரு விடியலைத் தரவேண்டும் என்பது ஜனநாயகவாதிகளின் எதிர்பார்ப்பாகும்.

முனைவர் மணி கணேசன்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News