Join THAMIZHKADAL WhatsApp Groups
பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ய ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதற்கான கரைகள் பற்களில் இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருளை ஒழிக்க தமிழக அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, கல்வி நிலையங்களில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க தீவிர முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க, அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், ஆய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட, முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் கூட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்படும். அந்தவகையில், அண்மையில் நடந்த கூட்டத்தின்போது, மாணவர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதன்படி, பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களை கண்காணிக்க, முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பள்ளிக்கு அருகே உள்ள கடைகளில் 'கூல் லிப்' உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யவும், மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதாவது, பள்ளிகளில் மருத்துவ சோதனையின்போது மாணவர்களுக்கு போதைப்பொருள் பழக்கம் உள்ளதா என்பதை சோதிக்க வேண்டும், போதை பொருட்கள் பயன்படுத்துவதற்கான கறை மாணவர்களின் பற்களில் இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாரத்தின் முதல் நாள் காவல்துறை ஆய்வாளர், உளவியல் நிபுணரை அழைத்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும், தேவையான மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்க வேண்டும், போதைப் பொருள் இருக்கும் கடைகள் குறித்து காவல் நிலையங்களுக்கு புகார் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment