Join THAMIZHKADAL WhatsApp Groups
'தேர்தல் வாக்குறுதில சொன்ன 1000 ரூபாய் எப்போ தருவாங்க?' என்ற கேள்விகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் பதிலாக அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி, தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கொடுக்கப்பட உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற, சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 1,06,50,000 பெண்கள் ஆவார்கள். இவர்களுக்கு வரும் 15-ம் தேதி முதல், மாதந்தோறும் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படும்.
இதைத்தொடர்ந்து தற்போது மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளர்களுக்கு ரேசன் கடைகளில் பிரத்யேக ஏடிஎம் கார்டு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் பலருக்கும் குழப்பத்தையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இதுக்குறித்து விசாரித்ததில், "இன்னும் பலரின் வங்கி கணக்குகள் ஆதார் எண்ணுடனும், பான் எண்ணுடனும் இணைக்கப்படாமலும், சில வங்கி கணக்குகள் செயல்படாமலும் இருக்கின்றன. இவர்கள் கூட்டுறவு வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் புதியதாக வங்கி கணக்கு தொடங்க, கடந்த வாரம் ரேசன் கடைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த முகாமில் பலரும் கலந்து கொண்டு கணக்குகள் தொடங்கினர். ஆக, வங்கியில் கணக்கு இல்லாத அல்லது செயல்படாத கணக்கு வைத்திருக்கும் பயனாளர்கள், இந்த முகாமில் கணக்கு தொடங்கியிருந்தால் அவர்களுக்கு விரைவில் ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படும்.
மற்ற பயனாளர்களுக்கு அவரவர் வங்கி கணக்குகளிலேயே ரூ.1000 போய் சேரும். இன்று காலையில் இருந்து சில ரேசன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் அரசு 10 பைசா வரவு வைத்துள்ளது.
ஆனால் பிரத்யேக ஏடிஎம் கார்டுகள் குறித்த தகவல்கள் இன்னும் தெளிவாக சொல்லப்படவில்லை" என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment