சி.பி.எஸ்.இ., 10வது மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கு, தனியார் பதிப்பாளருடன் இணைந்து மாதிரி வினாத்தாள் வெளியிடப்படவில்லை. அது போன்ற விளம்பரங்ளை நம்பி மாணவர்கள் ஏமாற வேண்டாம்' என, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம், 'எஜுகார்ட்' என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து, 10வது மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாள்களை வெளியிட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
மேலும், மாணவர்கள் பணம் செலுத்தி, 'ஆன்லைன்' வாயிலாக அந்த மாதிரி வினாத்தாள்களை வாங்கி பயன் அடையலாம் என்றும் விளம்பரங்கள் செய்யப்படுவதாக சி.பி.எஸ்.இ.,க்கு தகவல் கிடைத்தது. இது முற்றிலும் தவறான தகவல் என சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிக்கை: புதிய கல்விக் கொள்கை 2020ன்படி, திறமையை மையமாகக் கொண்ட கல்வி மற்றும் மதிப்பீடு முறையை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பள்ளியிலும், சி.பி.எஸ்.இ., வாரியம் அமல்படுத்தி உள்ளது. 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான மாதிரி வினா பயிற்சி தாள்களை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.
மற்றபடி தனியார் பதிப்பாளருடன் இணைந்து மாதிரி வினாத்தாள்களை நாங்கள் வெளியிடவில்லை. அது போன்ற விளம்பரங்களை பார்த்து மாணவர்கள் ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment