Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, September 12, 2023

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பள்ளிக் கல்வி செயலர் மீதான வாரன்ட் வாபஸ்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் ஆஜரானதால் அவர்களுக்கு எதிராக ஜாமினில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திரும்பப் பெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் கரிவலம்வந்தநல்லுார் அரசுப் பள்ளியில் துாய்மைப் பணியாளராக 1998ல் சின்னத்தாய் என்பவர் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டார்.

அவர், 'தனது பணியை வரன்முறைப்படுத்தி அதற்குரிய பணப் பலன்களை வழங்க பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும்,' என 2013ல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்.

தனி நீதிபதி, 'மனுதாரரின் பணியை வரன்முறைப்படுத்தி பணப்பலன்களை வழங்க வேண்டும்,' என 2016 ல் உத்தரவிட்டார். பின் சின்னத்தாய் இறந்தார். அவரது கணவர் பரமன்,' தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றாததால் தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார், திருநெல்வேலி கல்வி மாவட்ட அலுவலர் வசந்தா மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.

ஜூலையில் நீதிபதி பட்டு தேவானந்த் விசாரித்தார்.

அரசு தரப்பு: தனி நீதிபதியின் உத்தரவு ஜூலை 14ல் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தது.

நீதிபதி: தாமதமாக நிறைவேற்றியது ஏன் என்பதற்கு காகர்லா உஷா, நந்தகுமார், வசந்தா ஆக.,31 ல் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆக.,31 ல் காகர்லா உஷா, நந்தகுமார் தரப்பில்,'அமைச்சர் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டியுள்ளது. ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டும்,' என மனு செய்யப்பட்டது.

இதை தள்ளுபடி செய்த நீதிபதி, இருவரையும் ஆஜராக உத்தரவிட்டும் ஆஜராகவில்லை. அவர்களுக்கு எதிராக ஜாமினில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பிக்கப்படுகிறது. இருவரையும் செப்.,11ல் ஆஜர்படுத்த சென்னை போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.

நீதிபதி பட்டு தேவானந்த் நேற்று விசாரித்தார்.

காகர்லா உஷா, நந்தகுமார் ஆஜராகினர்.

நீதிபதி: அவமதிப்பு வழக்குகளில் 90 சதவீதம் கல்வித்துறை தொடர்பாகத்தான் தாக்கலாகிறது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற 7 ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டது ஏற்புடையதல்ல. வாரன்ட் உத்தரவை நிறைவேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. இது வேதனையளிக்கிறது. சாதாரண மக்களுக்கு இதே நிலையை காவல்துறை பின்பற்றுமா என அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

நீதிபதி: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியதால் இவ்வழக்கை நிலுவையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. காகர்லா உஷா, நந்தகுமாருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட வாரன்ட் உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது. வழக்கு முடிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News