Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, September 18, 2023

ஆயுள் முழுவதும் செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி மாத வழிபாடு!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ் மாதங்களில் 6வது மாதமான புரட்டாசி கன்னி ராசிக்குரிய மாதமாக இன்று பிறக்கிறது.பெருமாள் ஆலயங்கள் அனைத்துமே திருவிழா தான் என்றாலும் திருமலை திருப்பதியில் புரட்டாசி மாதத்தில் திருமலைவாசனின் பிரம்மோற்ஸவம், கருடசேவை என தினமும் திருவிழா தான்.புரட்டாசி மாதத்தில் பல்வேறு சிறப்புகள் உண்டு.


இந்த மாதத்தில் தான் அம்பாளுக்கு உரிய நவராத்திரியும், சிவனருளைப் பெற்றுத் தரும் கேதாரி கௌரி விரதமும் அனுஷ்டிக்கப்படுகிறது.அத்துடன் நமது பித்ருக்களின் அருளாசியும், தெய்வத்தின் அனுக்கிரஹமும் இணைந்து கிடைக்கும் மாதமாக அமைந்துள்ளது.இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு வருவது சிறப்பு. நமது வாழ்வின் இன்னல்கள், துன்பங்கள், துயரங்கள், கவலைகள் போக்கி வேண்டிய வரம் அளித்து சகல சௌபாக்கியங்களும் கைகூடும் என்பது நம்பிக்கை

புரட்டாசி மாதம் நம்மை காத்து நிற்கும் கடவுள் பெருமாளுக்குரிய மாதம்.இத்தகைய பெரும் பேறு பெற்ற புரட்டாசியில் பெருமாளுக்கு நாள் முழுவதும் விரதம் இருந்து மனதார பிரார்த்தனை செய்பவர்கள் அந்த வருடம் முழுவதும் குறைவில்லாத செல்வத்தை பெறுவர் என்பது ஐதிகம்.

உண்மையான பக்தி, மனத்தூய்மை இவற்றை கடைப்பிடித்து ஒருமாதம் முழுவதும் பெருமாளின் நினைவில் இருந்து விரதம் இருப்பது தான் விசேஷம். புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவை தவிர்க்க வேண்டும். புரட்டாசி மாதத்தில் வரும் ஏதாவது ஒரு சனிக்கிழமையில் இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம். குறிப்பிட்ட சனிக்கிழமையில் அதிகாலையில் எழுந்து வீடு சுத்தம் செய்து, குளித்து, பூஜை சாமான்கள் சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் இட வேண்டும்.

கலசம் வைக்க சொம்பு தேவை. அதற்கு நாமமிட்டு துளசி மாலை சுற்ற வேண்டும். இந்த சொம்பில் வீடு வீடாக சென்று தளுகைக்கு அரிசி கேட்க கொண்டு செல்ல வேண்டும். இப்படி செய்வதால் நம்முடைய அகந்தை அழியும் . அப்படிக் கொண்டு வரும் அரிசி மற்றும் பணத்தை வைத்து தான் பூஜை செய்ய வேண்டும். நைவேத்தியங்கள் படைக்க இந்த அரிசியை தான் பயன்படுத்த வேண்டும்.

வாழை இலையில் புளி சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வடை, சுண்டல், பாயாசம் இடம் பெறுவது நல்லது. சில குடும்பங்களில் சாதம், குழம்பு, கூட்டு, பொரியல், அப்பளம், வடை, பாயாசம் என்று படையல் இடுவதும் வழக்கம்.நைவேத்தியம் படைத்து பெருமாளுக்கு 9 அல்லது 11 எண்ணிக்கையில் வடை மாலை சாற்ற வேண்டும். சொம்பில் நாமம் போட்டு பச்சரிசி மற்றும் சில்லறை நாணயங்களை நிரப்பிக் கொள்ளலாம்.

துளசி தீர்த்தம் வைக்கும் பஞ்ச பாத்திரத்தில் சிறிது பச்சை கற்பூரம், துளசி சேர்க்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தேங்காயும் இடம் பெறுவது அவசியம் . புரட்டாசி பூஜையில் மாவிளக்கு ஏற்றுவது விசேஷம். தேங்காய் உடைத்து, மாவிளக்கேற்றி, தூப தீபங்கள் காண்பித்து, சாம்பிராணி , கற்பூர ஆரத்தியை படையல் முழுவதுமாக சுற்றி எடுக்க வேண்டும். கோவிந்தா.. கோவிந்தா.. நாமம் எழுப்பி பெருமாளை வழிபட வேண்டும்.

இந்த விரதத்தை முடிக்கும் வரை உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருப்பது நலம். சனிக்கிழமைகளில் மதியம் 1.30 மணியில் இருந்து 3 மணி வரை எமகண்டம் . இதனால் 1.30 மணிக்குள்ளாக பூஜையை முடித்துக் கொள்ள வேண்டும். காக்கைக்கு உணவு வைத்த பின் விரதத்தை முடிக்கலாம். மேலும் அன்னதானம் செய்வது மிக மிக சிறப்பான பலன்களை கொடுக்கும். சனிக்கிழமை விரதத்தை இந்த முறையில் கடைபிடிக்க பெருமாளின் ஆசீர்வாதம் முழுமையாக பெறலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News