Join THAMIZHKADAL WhatsApp Groups
எண்ணும் எழுத்தும் திட்டத்தில் வகுப்பறை செயல்பாடுகளை கண்காணித்து, ஆய்வு செய்ய, ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர்களை நியமித்துள்ளதால், அதிருப்தி எழுந்துள்ளது.
கொரோனா தொற்றுக்குப்பின், ஆரம்ப வகுப்புகளில் ஏற்பட்ட கற்றல் இடைவெளி குறைக்க, 'எண்ணும் எழுத்தும்' பாடத்திட்டம் கடந்தாண்டு கொண்டு வரப்பட்டது.
நடப்பாண்டு முதல் இப்பாடத்திட்டம், ஐந்தாம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 2025க்குள், எட்டு வயதுக்குட்பட்டோர், எழுதுதல், வாசித்தல், அடிப்படை கணக்கு திறன்களில் குறைந்த பட்ச கற்றல் அடைவு பெற வைப்பதே, இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த சிலபஸ் அறிமுகம் செய்யப்பட்ட போதே, பாட துணை கருவிகளை தயாரித்தல், வாரந்தோறும் ஆன்லைன் தேர்வு நடத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு, ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், தற்போது மூன்றாம் நபர் மதிப்பீட்டு முறையில், வகுப்பறை செயல்பாடுகள் அறிய முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டந்தோறும் 135 பள்ளிகளில், தலா ஒரு முதுகலை ஆசிரியர் தலைமையில், பி.எட்., படிக்கும் மாணவர்களை கொண்டு, வகுப்பறை செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
வரும் 15ம் தேதிக்குள், மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றல் திறன் பரிசோதித்து, செயலியில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நடைமுறை, ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
'கல்வித்துறை செவிசாய்க்கவில்லை'
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அரசு கூறுகையில், ''ஏற்கனவே, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை, பி.இ.ஓ., முதல் பல்வேறு நிலையில் உள்ள அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். இந்நிலையில், வருங்காலத்தில் ஆசிரியராக வேண்டுமென படிக்கும் பி.எட்., மாணவர்கள், பல ஆண்டு அனுபவமுள்ள, ஆசிரியர்களின் வகுப்பறை செயல்பாடுகளை ஆய்வு செய்ய கூடாதென வலியுறுத்தினோம். ஆனால் இதற்கு கல்வித்துறை செவிசாய்க்கவில்லை,'' என்றார்.
No comments:
Post a Comment