Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆதிதிராவிடர், பழங்குடியினர் உள்ளிட்ட பட்டியலின மற்றும் கிறித்துவ மதம் மாறிய மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்துக்கான இணையதளம் அடுத்த மாதம் அக்டோபரில் தொடங்கப்படவுள்ளது என ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
"ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், பிரிமெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம், பெண் கல்வி ஊக்குவிப்பு தொகைத் திட்டம் (வருமான வரம்பு ஏதுமின்றி), சுகாதாரமற்ற தொழில் புரிவோர்களின் குழந்தைகளுக்கான பிரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் (சாதி மற்றும் வருமான வரம்பு ஏதுமின்றி) உள்ளிட்ட பல உதவித் தொகை திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
2023 - 2024 ஆம் கல்வியாண்டில் இக்கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான இணையதளம் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படவுள்ளது. மேற்காணும் திட்டங்களில் பயனடைய விரும்பும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் ஆதார், சாதி சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் மற்றும் கீழ்காணும் நிபந்தனைகளை பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1. சாதிச் சான்று மற்றும் வருமானச் சான்று ஆகியவை இணைய சான்றுகளாக இருத்தல் அவசியம். இணைய சான்றுகளை பெற அருகிலுள்ள இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
2. ஆதாரில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், இல்லை என்றால் சரியான விவரங்களை திருத்திக் கொள்ளவேண்டும்
3. மாணவரின் வங்கிக் கணக்கு எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க (seeding) வேண்டும்
4. ஆதாருடன் இணைக்கப்பட்ட (seeding) வங்கி கணக்கு எண் செயல்பாட்டில் (Active) இருக்க வேண்டும்.
5. ஆதாருடன் வங்கிக் கணக்கு எண் இணைக்கப்பட்டிருகிறதா என்ற விவரத்தினை உறுதி படுத்த https://resident.uidai.gov.in/bank-mapper என்ற இணைய முகவரியை பயன்படுத்தி கொள்ளுமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
6. ஆதாருடன் வங்கிக் கணக்கினை இணைக்காதவர்கள் சம்மந்தப்பட்ட வங்கிகளை அணுகி ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
இவ்விவரங்களை மாணாக்கர்களுக்கு தெரிவித்து ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க உதவிடுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment