Join THAMIZHKADAL WhatsApp Groups
தேர்தல் கால உறுதிமொழியை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நவ.1 முதல் அடுத்தடுத்து போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளனர்.
அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் பலவும் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்துவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன. அவற்றை கடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., நிறைவேற்றுவதாக உறுதியளித்தது. ஆட்சிக்கு வந்தபின் அவற்றை நிறைவேற்றாமல் தாமதிப்பதாக புகார் தெரிவிக்கும் ஊழியர் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்கங்களை உள்ளடக்கிய 'ஜாக்டோ ஜியோ' அமைப்பினரும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதன் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வம் கூறியதாவது: நேற்று முன்தினம் திருச்சியில் நடந்த ஜாக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டம், உயர்மட்டக் குழுக்கூட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் குமார், சங்கர், இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர்.
கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். முன் ஜாக்டோ ஜியோ மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழி அளித்தார். அதனால் நிறைவேறும் என நம்பி இருந்தோம். அகவிலைப்படி உயர்வை தவிர வேறெதுவும் நிறைவேறவில்லை. போராடிய ஆசிரியர்கள், செவிலியர்களை அடக்கு முறையால் கைது செய்தனர்.
எனவே பழைய பென்ஷன் அமல், கொரோனா காலத்தில் முடக்கிய சரண்டர் விடுப்பை வழங்குதல், காலியிடங்களை நிரப்புதல் உட்பட பல கோரிக்கைகளை அமல்படுத்த வலியுறுத்தி நவ.1ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், நவ.15 முதல் 24 வரை மாநிலம் முழுவதும் பிரசார சந்திப்பு இயக்கம், நவ.25 ல் மாவட்ட தலைநகரில் மறியல் நடத்த உள்ளோம்.
அதிலும் தீர்வு கிடைக்காவிடில் டிச.28 ல் சென்னையில் கோட்டையில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்.
தற்போது மத்திய அரசு 4 சதவீத அகவிலைப்படி அறிவித்துள்ளது. மத்திய அரசு வழங்கும்போதெல்லாம் நாங்களும் வழங்குவோம் என தமிழக அரசும் அறிவித்தது. தற்போது பண்டிகை காலம் என்பதால் முன்னுரிமை கொடுத்து வழங்க வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment