Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 30, 2023

ஆசிரியர் பணி நியமன தேர்வு அறிவிப்பை கண்டித்து அமைச்சர் அலுவலகம் முற்றுகை


ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு, மீண்டும் பணி நியமனத் தேர்வு அறிவித்திருப்பதை கண்டித்து, திருச்சியில் உள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழகத்தில், 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமன போட்டி தேர்வு, 2024 ஜன., 7ம் தேதி நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதை கண்டித்து, நேற்று ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி, பணி நியமனத்துக்கு காத்திருந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர், திருச்சியில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:

கடந்த 2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு தரப்பினருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அதில், 20,000 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும், பணி வழங்கப்படவில்லை.

தேர்தலின் போது, தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், 2013ல் தகுதித் தேர்வு எழுதியவர்கள், பணி நியமனம் செய்யப்படுவர் என, உறுதி அளித்தனர்.

ஆனால், தற்போது பணி நியமனத்துக்கு, போட்டித் தேர்வு நடத்தப் போவதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன் வாயிலாக, 2013ல் தகுதித் தேர்வு எழுதி சான்றிதழ் சரி பார்க்கப்பட்டவர்கள் பாதிக்கப்படுவர்.

அ.தி.மு.க., ஆட்சியின் போது, எதிர்க்கட்சியாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஆசிரியர் நியமனத் தேர்வை ரத்து செய்வோம் என, தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தார்.

தற்போது, நியமன தேர்வு நடத்தப்படும் என, அரசாணை வெளியாகி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன், அமைச்சர் அலுவலக தரப்பினரும், போலீசாரும் பேச்சு நடத்தினர்.

வரும், 31ம் தேதி, சென்னையில் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்தனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News