Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 2, 2023

போராடும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல - பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 2009-ம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதன்பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால், அடிப்படை ஊதியத்தில் 3,170 ரூபாய் குறைந்துள்ளது. இந்த ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சம வேலை, சம ஊதியம் என்ற கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தி போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

தமிழ்நாட்டில், கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதிக்கு முன்னர் பணிக்குச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக 8,370 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. அவர்களுக்கு தர ஊதியமாக 2,800 ரூபாய் வழங்கப்பட்டது. அதேநேரத்தில் 2009 ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதிக்குப் பின் பணிக்குச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக 5,200 ரூபாயும், தர ஊதியமாக 2, 800 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தியே சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஆனால், ஊதியத்தில் முரண்பாடு ஏதும் இல்லை என பள்ளிகல்வித்துறை விளக்கம் அளிக்கிறது. அதாவது, ஆறாவது ஊதியக்குழு 2009 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டபோது, முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டதால், 2009 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி வரை பணியில் சேர்ந்தவர்களுக்கு அடிப்படை ஊதியம் மாற்றி அமைக்கப்பட்டதாக கூறியுள்ளது.

ஆனால், 2009 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதிக்குப் பிறகு பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு, 6 வது ஊதிய குழு அடிப்படையில் புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டதாகவும், புதிய ஊதிய விகிதத்தை ஒப்புக்கொண்டு பணியில் சேர்ந்த பின்னர் தற்போது அதை மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறுவது ஏற்கத்தக்கது அல்ல எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

- News 18 Tamil Nadu

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News