Join THAMIZHKADAL WhatsApp Groups
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யவில்லை என்றாலும் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படும் என தகவல் பரவி வந்த நிலையில், சட்டசபையில் இன்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும் ரேஷன் கடைக்கு வந்து கட்டாயம் கைரேகை வைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுமார் 2.5 கோடி குடும்ப அட்டைகளில் 1 கோடிக்கும் அதிகமாக வறுமைக் கோட்டிற்கு கீழான குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த அட்டை தாரர்களுக்கு மத்திய அரசின் தொகுப்பில் இருந்து கூடுதல் அரிசி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கான ரேஷன் அட்டை வைத்துள்ளவர்கள் தமது கைவிரல் ரேகையை பயோமெட்ரிக் மிஷினில் வைத்தால் மட்டுமே ரேஷன் பொருட்களை பெற முடியும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இல்லையென்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்றும் தகவல் பரவி வருவதால் மக்களிடையே அச்சமும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ சின்னதுரை இதுதொடர்பாக கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யவில்லை என்றாலும் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது, தொடர்ந்து அனைத்து பொருட்களும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பொது விநியோகத் திட்டத்தை எளிமைப்படுத்தும் வகையில் கைரேகைகளை பெற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை 45% மக்கள் தங்களது கைரேகைகளை பதிவு செய்துள்ளனர். இனி வரும் நாட்களில் வீடுகளுக்கே சென்று கைரேகைகளை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
No comments:
Post a Comment