Thursday, October 19, 2023

"டெஸ்ட்" முடியல.. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அரசு வைத்த டுவிஸ்ட்! பணம் வாங்கினாலும் சோதனை

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 2 வது மாதமாக வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டு இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில் புதிய ட்விஸ்ட் ஒன்றை வைத்து உள்ளது.

என்ன அது? விரிவாக பார்ப்போம்.

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 27.03.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12,000/- உரிமைத்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது.

தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு மக்கள் நலத்திட்டமும், தேவையுள்ள ஒருவர்கூட விடுபடாமல் தகுதியான பயனாளிகளைச் சென்றுசேர வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு அதிக அக்கறையுடன் செயல்பட்டுவருகிறது. அதுபோலவே, கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கும் தகுதியான பயனாளிகளைக் கண்டறிவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 1.06 கோடி தகுதியான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான உரிமைத் தொகையானது ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 1000/- வீதம் முதல் தவணையாக மொத்தம் ரூபாய் 10,65,21,98,000/- அவர்களின் வங்கிக் கணக்கின் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளது. இத்தனை பயனாளிகளுக்கு ஒரே நேரத்தில் வங்கிக் கணக்கில் அரசின் நலத்திட்ட நிதி வரவு வைக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

நடப்பு அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட வேண்டிய அக்டோபர் 15, அரசு விடுமுறை நாள் என்பதால், இத்திட்டத்தின் கீழ் பயனடையும் அனைத்து மகளிருக்கும், ஒரு நாள் முன்னதாகவே உரிமைத் தொகையினை அனுப்பி வைக்கத் தாயுள்ளத்தோடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதியான பயனாளி ஒருவர்கூட விடுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கில், திருநங்கைகள் உள்ளிட்ட பல்வேறு தகுதியான குடும்பத் தலைவியர் கண்டறியப்பட்டு, அக்டோபர் மாதத்திற்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உரிமைத்தொகை பெற்றுக்கொண்டவர்களில் இறந்துபோனவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட 8,833 பெயர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளன. நடப்பு அக்டோபர் மாதத்திற்கான 1,06,48,406 மகளிருக்கான ரூபாய் 1,06,48,406,000/- உரிமைத்தொகையானது ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 14 அன்றே அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாகக் கொண்டுசேர்க்கப்பட்டுள்ளது. இப்பயனாளிகளில் முறையான வங்கிக் கணக்கினைக் கொண்டிராத 87.785 பயனாளிகளுக்கு அஞ்சல் பணவிடை மூலமாகவும் உரிமைத்தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதில் உரிமைத் தொகை விண்ணப்பம் ஏற்கப்பட்டு பணம் பெற்றவர்களில் சில தவறான தகவல்களை குறிப்பிட்டு இருந்ததாகவும், இறந்தவர்களின் பெயர்களில் விண்ணப்பித்து பணம் பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் அத்தகைய 8,833 பேரை கண்டறிந்து அவர்களின் பெயர்களை அரசு நீக்கி இருக்கிறது. இது குறித்து விசாரித்தபோது ஏற்கனவே ஏற்கப்பட்ட விண்ணப்பங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாகவும், மேல்முறையீடு விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு உரிமைத் தொகை சென்றடைய அரசு முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News