Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, October 14, 2023

சைதை துரைசாமி மையத்தில் கட்டணமில்லா பயிற்சி!

தமிழ்நாடு மாநில நீதித்துறையில் 245 சிவில் நீதிபதி பதவிகளுக்கு கடந்த ஜூன் 1 ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவிப்பு வெளியிட்டது.தொடர்ந்து மேற்கண்ட பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி நடைபெற்றது.

தற்போது முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி தேர்வு எழுதியவர்களில் 2,544 பேர் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு வரும் நவம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,544 பேரில் 132 பேர் சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தில் பயின்றவர்கள்.

இந்நிலையில் முதன்மைத் தேர்விற்கும் மனிதநேய பயிற்சி மையத்தில் கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்படும் என்று சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிவில் நீதிபதி, மாவட்ட நீதிபதி, அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர் ஆகிய பதவிகளுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், மனிதநேய கட்டணமில்லா கல்வியகத்துடன் இணைந்து இலவச பயிற்சி அளித்து வருகிறது.இதுவரை இந்த பதவிகளில் 206 பேர் வெற்றி பெற்று பணிகளில் உள்ளனர். இதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் மாதம் சிவில் நீதிபதி பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நடந்தது. அதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதற்கான தேர்வு முடிவு வெளியான நிலையில், அதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், மனிதநேய கட்டணமில்லா கல்வியகத்துடன் இணைந்து நடத்திய இலவச பயிற்சியில் படித்த 132 வழக்கறிஞர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக நடைபெற உள்ள முதன்மைத் தேர்வுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

இந்த பயிற்சியை பெற விரும்புவோர் அக்டோபர் 13 முதல் 15 ஆம் தேதி வரை, எண்.28, முதல் பிரதான சாலை, சி.ஐ.டி. நகர், சென்னை-35 என்ற முகவரியில் அமைந்துள்ள மனிதநேயம் கட்டணமில்லா ஐ.ஏ.எஸ். கல்வியகத்துக்கு நேரிலோ,044-24358373, 24330952, 8428431107, 044-25342739 என்ற எண்களிலோ, mntfreeias.com என்ற இணையதளத்திலோ, tnbarcouncil@yahoo.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.பயிற்சியை பொறுத்தவரையில், வருகிற 16 ஆம் தேதி முதல் பார் கவுன்சில் ஆடிட்டோரியத்தில் நடைபெறும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment