Join THAMIZHKADAL WhatsApp Groups
கூகுள் கணக்குகளை அணுக, வழக்கமான பாஸ்வேர்ட்(Password) நடைமுறைகளுக்கு அப்பால் பாஸ்கீ(Passkey) முறையை அமல்படுத்த முடிவாகி உள்ளது. இதனால் கூகுள் கணக்குகளை பராமரிப்பதில் எளிமை கிட்டுவதோடு, பாதுகாப்பும் பல அடுக்குகளுக்கு அதிகரிக்க வாய்ப்பாகிறது.
இதன்படி கூகுள் கணக்குகளை திறப்பதற்கு வழக்கமான பாஸ்வேர்ட் மற்றும் அதனைத் தொடரும் இரண்டு படியிலான சரிபார்ப்பு நடைமுறைகளுக்கு இனி விடைதரலாம். கூகுள் மட்டுமன்றி ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட ஒட்டுமொத்த டெக் உலகமே பாஸ்வேர்ட் நடைமுறைகளை தலைமுழுக முடிவு செய்துள்ளன. பாஸ்வேர்ட் நடைமுறைகள் காலம் கடந்தவை என டெக் உலகு நம்புகிறது.
கூகுள் பாஸ்கீ
பயனர்களை பொறுத்தளவிலும் பாஸ்வேர்ட் என்பதை சுமையாகவே பாவிக்கிறார்கள். அந்த சுமையை தவிர்க்க, பெரும்பாலானவர்களின் பாஸ்வேர்ட் என்பது ஊகிக்க எளிமையாக அமைந்திருக்கின்றன. பாஸ்வேர்ட் என்பதன் நோக்கமும் இதனால் அடிபடுகிறது. மறுபக்கம் கடினமான பாஸ்வேர்ட் கொண்டு கட்டமைத்தவர்கள், அந்த பாஸ்வேர்டை மறந்துவிட்டு தடுமாறித் தவிக்கிறார்கள்.
இத்தகைய பாஸ்வேர்ட் நடைமுறையை கைவிட்டு, பாஸ்கீக்கு நகர்வதன் மூலம் கூகுள் கணக்குகளின் பாதுகாப்பை அதிகரிக்க அதன் தாய் நிறுவனமான அல்பாபெட் முடிவு செய்துள்ளது. பாரம்பரிய பாஸ்வேர்ட் நடைமுறைகள் மற்றும் அதனையொட்டிய இரு படி சரிபார்ப்புகளுக்கு மாறாக கைரேகை, முக ஸ்கேன் உள்ளிட்ட பயோமெட்ரிக் நுட்பங்களுக்கு இனி பயனர்கள் நகரலாம்.
ஆனால் தனிநபரின் பயோமெட்ரிக் தரவுகள், கூகுள் போன்ற பெரு நிறுவனங்களின் பிடியில் சிக்குவதை, தனியுரிமைக்கு முக்கியத்துவம் தரும் பயனர்கள் வெறுக்கக்கூடும். அவர்களை சமாதானப்படுத்தும் வகையில், இந்த பயோமெட்ரிக் தரவுகளை இதர மூன்றாம் நபர்களிடம் பகிரப்போவதில்லை என கூகுள் உறுதியளிக்கிறது.
பாஸ்கீ நடைமுறை மூலம் சந்தேகத்துக்குரிய அணுகலை கூகுள் கணக்குகள் தாமாக ரத்து செய்துவிடும். அல்லது கூடுதல் சரிபார்ப்புகளை கோரும். குறிப்பாக சந்தேகத்துக்கு உரிய நடவடிக்கைகளை உரிய நபருக்கு உடனே அறிவிக்கும். இந்த பாஸ்கீ நடைமுறைகளை ஆன்ட்ராய்டு மட்டுமன்றி ஐபோன் சாதனங்களிலும் சுலபமாக இயக்கலாம்.
அதே வேளையில் பிறருடன் பகிர்ந்துகொள்ளும் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் சாதனங்களில் பாஸ்கீகளை அமைப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு பகிரப்படும் சாதனங்கள், பயனர்களின் கூகுள் கணக்குகளை எளிதாக அணுக உதவுவதால், ஆபத்தை விளைவிக்கக் கூடும். பயனர்கள் தங்கள் கணக்கை வேறு எவரேனும் அணுகலாம் என்று அஞ்சினாலோ அல்லது பாஸ்கீ சேமிக்கப்பட்ட தனி சாதனத்தை இழந்தாலோ, அவர்கள் விரைந்து தங்கள் கூகுள் கணக்குகளின் பாஸ்கீகளை ரத்து செய்துவிடலாம்.
மாறாக பாஸ்வேர்டு நடைமுறையே போதும் என்பவர்கள் அதற்கான பாரம்பரிய உள்நுழைவு முறைகளை வழக்கம்போலவே பின்பற்றவும் கூகுள் வழிசெய்கிறது.
No comments:
Post a Comment