தமிழர் சமூகம் கலை, கட்டடம், அறிவியல் அறிவு எனப் பல்வேறு சிறப்பான கலாச்சாரங்களை கொண்டது என நாம் அனைவரும் அறிவோம்.
அதே போல், பண்டைய தமிழர்கள் தங்களது உணவு வகைகளையும் மிகச்சிறப்பாக தேர்ந்தெடுத்து உட்கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இன்றும் ஒரு சில வீடுகளில் கீரையை தினசரி எடுத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளது. கீரைகள் அதிக ஊட்டச்சத்துகள் கொண்டுள்ளதால் உடல் வலிமையை மேம்படுத்த உதவுகிறது.
கீரையின் பயன்களை நாம் அறிந்திருந்தாலும் கீரையை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள அனைவராலும் முடியவில்லை. கீரையை சுத்தப்படுத்துவதற்கு அதிக நேரம் தேவைப்படும் என்ற பொதுவான கருத்து உண்டு. மேலும், பெரும்பாலான வீடுகளில் ஆண், பெண் என இருபாலரும் பணிக்கு செல்லும் சூழல் போன்றவையே கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள தடைகளாக அமைகின்றன.
கீரைகளில் பல வகைகள் உண்டு. ஆனாலும் ஒவ்வொரு கீரையும் தன் பண்புகளின் அடிப்படையில் தனித்துவம் கொண்டவை. கீரைகள் அனைத்தையுமே நம் முன்னோர்கள், மூலிகை தாவரமாகவே அடையாளம் கண்டுள்ளனர். நாம் அறிந்த கீரைகள் ஒருசில வகையே. அந்தவகையில், பெரும்பாலோனோர் அறியாத கீரை வகைகளில் ஒன்று சிறுபசலைக்கீரை. குறிப்பாக பசலைக் கீரையில், பல வகைகள் உண்டு. அவற்றில், கொடிப்பசலை, சீலோன் பசலை, கொத்துப் பசலை, சிறுபசலை போன்றவைகளாகும்.
சிறு பசலைக்கீரை கிராமப்புறங்களில் சாலை ஓரங்களிலும், வயல் வெளிகளிலும் பயிர்களுக்கிடையே களைச்செடிகளாகவும், தரிசு நிலங்களிலும் காணப்படும். இந்தக் கீரை பெரும்பாலானோர் கண்டிருந்திருந்தாலும் உணவில் சேர்த்துக் கொள்ளலாமா என அறிந்திருக்க வாய்ப்பு குறைவு. இக்கீரையில் சிறிய வடிவிலான மஞ்சள் நிறப்பூக்கள் காணப்படும். இலைகள், கடுகு அளவில் சற்று தடித்து இருக்கும். இது 40.செ.மீ. நீளம் வரையே வளரக்கூடியது. குறிப்பாக, வறட்சியான இடங்களிலும் வளரும் இயல்பு கொண்டவை. மண்வளம் பாதிக்கப்பட்ட இடங்களில் கூட வளரக்கூடும். இவை ஆண்டு முழுவதும் கிடைக்கப் பெறும் கீரையாகும்.
சிறுபசலைக்கீரையை, தரைப்பசலைக்கீரை என்றும் அழைப்பர். இதற்கு, கோழி களை என்ற வேறு பெயரும் உண்டு. இவை இந்தியா, சீனா, ஆப்பிரிக்கா, மியான்மர், பாகிஸ்தான், தாய்லாந்து, அமெரிக்கா, இந்தோனேஷியா, போர்ச்சுகல் உள்ளிட்ட பல நாடுகளில் காணப்படுகின்றது. இக்கீரையை பாரம்பரிய மருத்துவத்திற்காக சீனா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகள் பயன்படுத்தியதற்கான ஆய்வுத்தரவுகள் கூறுகின்றன.
சிறுபசலைக்கீரையின் தாவரவியல் பெயர் போர்ட்லகா குவாட்ரிஃபிடா
கீரைகள் பெரும்பாலும் ஊட்டச்சத்துகள் மிகுதியாக இருப்பினும் இக்கீரையில், வைட்டமின் சி, ஏ மற்றும் பி செரிந்து காணப்படுகிறது. மேலும், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் சோடியம் போன்ற உடல் வலிமைக்கு உதவும் தாதுக்களும் உள்ளன.
குறிப்பாக, இக்கீரையில் ஓமேகா -3 ஃபேட்டி ஆசிட் இருப்பது சிறப்புக்குரிய ஒன்றாகும். ஏனெனில், ஓமேகா 3, ஃபேட்டி ஆசிட் போன்றவை மீன் போன்ற அசைவ உணவுகளிலேயே அதிகம் காணப்படும். ஆகையால், அசைவ உணவுகளை தவிர்ப்பவர்கள், இந்தக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.
சிறுபசலைக்கீரையில் காணப்படும் மருத்துவ குணங்கள்
இக்கீரையில் காணப்படும் மருத்துவ மூலக்கூறுகள் ( பீட்டாலைன், பீட்டாசலனின் ) காரணமாக பல்வேறு மருத்துவ பண்புகளைக் கொண்டதாக சிறுபசலை திகழ்கிறது.
நமது நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்புடன்செயல்பட்டால்தான் உடல் பல்வேறு நோய் தாக்கத்திலிருந்து எளிதில் தன்னை பாதுகாத்து கொள்ளக்கூடும். எனவே, சிறுபசலைக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தக் கூடும்.
உடலில் உள்ள முக்கியமான மண்டலங்களில் ஒன்று செரிமான மண்டலம். இன்றைய மாறுபட்ட உணவுப் பழக்கவழக்கங்களால் நால்வரில் ஒருவர் வயிற்றுப்புண் பிரச்னையாலும் செரிமான பிரச்னையாலும் அவதிப்படுகிறார்கள். ஒருவர் வயிறு சம்பந்தமான பிரச்னையுடன் இருப்பாராயின் அவர்களால் எந்தவொரு செயலையும் சிறப்பாக செயல்படுத்த இயலாது. மேலும் எப்பொழுதும் சோர்வுடன் காணப்படுவார்கள். இத்தகைய பிரச்னையெல்லாம் சரிசெய்ய சிறுபசலைக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
சிறுபசலைக்கீரை புற்றுசெல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி புற்றுநோயின் தாக்கத்தை குறைக்க உதவும் என ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு, அடி வயிற்றுவலி போன்ற பிரச்னைகளுக்கும் சிறுபசலைக்கீரை தீர்வாக விளங்குகிறது.சிறுபசலைக்கீரையை அரைத்து தோல் வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் பூசி வர, நல்ல ஒரு மாற்றம் கிடைக்கும். அதிக மதுபழக்கத்திற்கு உள்ளாகி கல்லீரல் பாதிப்படைந்தவர்களுக்கு சிறுபசலைக்கீரை நச்சுக்களை நீக்கி பாதுகாக்கிறது.
உடலில், உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, இதயத்தை பாதுகாக்கவும், சுவாசப்பிரச்னைக்கு மருந்தாகவும், மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வாகவும் இக்கீரை உதவுகிறது. தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு இக்கீரை தன்னகத்தே கொண்டுள்ள ஓமேகா 3 ஃபேட்டி ஆசிட் மூலம் தீர்வாக உள்ளது. மேலும், மூளை நன்றாக செயல்பட்டு ஞாபக சக்தி அதிகரிக்கவும் சிறுபசலைக்கீரை உதவுகிறது.
No comments:
Post a Comment