மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில், மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும், தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு ஆண்டிற்கு அதிகபட்சமாக, 2 லட்சம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.கல்வி உதவித்தொகை பெற, 2023 - 24ம் கல்வி ஆண்டில் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship schemes என்ற இணையதள முகவரியிலோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து, பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரப்பினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை - 5 என்ற முகவரிக்கு வரும் டிச., 15ம் தேதிக்குள்ளும், புதிய விண்ணப்பங்களை வரும், 2024 ஜன., 15ம் தேதிக்குள்ளும் அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment