Monday, October 30, 2023

மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய ஆணையம் நோட்டீஸ்



சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி இந்திய மருத்துவ கலந்தாய்வு எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு இந்தாண்டு மாணவர் சேர்க்கை அட்டவணை வெளியிடப்பட்டது.

அதன்படி, மருத்துவ படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை-20ம் தேதி துவங்கி, ஆகஸ்ட்-6ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 9ம் தேதி துவங்கி 30ம் தேதிக்குள்ளும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு 31ம் தேதி துவங்கி, செப்டம்பர் 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.இறுதி கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 21ம் தேதி துவங்கி, 30ம் தேதியுடன் நிறைவு செய்ய வேண்டும்.ஆனால், புதுச்சேரி அரசால், மருத்துவ கலந்தாய்வை, கடந்த செப்., 30ம் தேதிக்குள் ஒரு கட்ட கலந்தாய்வை மட்டுமே நடத்தியது. காலதாமதமாக அக்.,7ம் தேதி இரண்டாம் கட்டம், அக்., 15ம் தேதி, மூன்றாம் கட்ட கலந்தாய்வை சென்டாக் நடத்தி முடித்தது.கடந்த, செப்.,30ம் தேதிக்கு பிறகு நடந்த கலந்தாய்வு தகுதியற்றது என, இந்திய மருத்துவ கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பால், 2 மற்றும் 3 ஆம் கட்ட கலந்தாய்வுகளில், எம்.பி.பி.எஸ்., சீட் பெற்ற, புதுச்சேரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.இதற்கிடையில் விதிமுறைகளை மீறி, கால தாமதமாக கலந்தாய்வு நடத்தியது தொடர்பாக, இந்திய மருத்துவ கலந்தாய்வு கமிட்டி, புதுச்சேரி அரசு மற்றும் தனியார் கல்லுாரிக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.அதில் கடந்த, ஜூலையில் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட பொது அறிவிப்பின்படி, எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வை செப்., 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். அதன் பிறகு, கலந்தாய்வை நடத்துவது தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்பையும், உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பையம், மீறுவதாகவும் இருக்கும்.அதனால், செப்.,30ம் தேதிக்கு பிறகு, சேர்க்கை பெற்ற மாணவர்கள், அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள்.

அதனால், செப்., 30ம் தேதிக்கு பிறகு, கலந்தாய்வு நடத்தியது தொடர்பாக, 7 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால், தேசிய மருத்துவ ஆணையத்தால் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.செப்.,30ம் தேதிக்கு பிறகு 558 பேர் புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் சென்டாக் மூலம் சேர்க்கை பெற்றுள்ளனர். இதில் தனியார் மருத்துவ கல்லுாரியில் நிர்வாக இட ஒதுக்கீட்டில் 503 பேர், அரசு ஒதுக்கீட்டில் 55 பேர் சேர்த்துள்ளனர்.

இம்மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகியுள்ள நிலையில் புதுச்சேரி அரசும், சுகாதாரத் துறையும், சேர்க்கை நடத்திய சென்டாக்கும் மவுனமாக உள்ளது சரியானது அல்ல.கடந்த 2016ம் ஆண்டு இதேபோன்ற சூழ்நிலை ஏற்பட்டது. எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்பிற்கு செப்., 30ம் தேதிக்கு பிறகு புதுச்சேரி மாணவர் சேர்க்கை அளித்ததால் 779 மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.அப்போது புதுச்சேரி அரசு மாணவர்களுக்கு உதவாமல் கைவிட்டது. தனியார் கல்லுாரிகளும், மாணவர்களும் கோர்ட்டை அனுகி நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற்று ஒருவழியாக படிப்பை முடித்தனர்.இறுதி கெடுவிற்கு பிறகு மாணவர் சேர்க்கை அளித்த விவகாரத்தில் புதுச்சேரி அரசுக்கு பொறுப்பு உள்ளது. 

அரசு அளித்த உறுதிமொழியின்படி தான் மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர். இவ்விஷயத்தில் புதுச்சேரி அரசு வழக்கம்போல் மவுனமாக இருக்காமல் துரிதமாக செயல்பட வேண்டும்.இந்திய மருத்துவ கலந்தாய்வு கமிட்டி முற்றிலும் கைவிட்டுள்ள சூழ்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு காலதாமதமாக அனுமதி கிடைத்ததால் தான், செப்.,30ம் தேதிக்குள் நடத்த முடியவில்லை என்பதை ஆதாரத்துடன் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட வேண்டும். உடனடியாக சட்டத் துறையுடன் ஆலோசித்து சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு அனுமதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News