Join THAMIZHKADAL WhatsApp Groups
பள்ளி ஆசிரியா்கள் நவீன மாற்றங்களுக்கு ஏற்ப தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்வது அவசியம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை கல்விக் கழகத்தின் சாா்பில், திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா்களுக்கான கல்வித்திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து அமைச்சா் பேசியது:
தென் மாவட்ட மக்களின் கல்வி வளா்ச்சிக்கு மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் சிறுபான்மையினக் கல்வி நிறுவனங்கள்தான் கிராமப்புற மக்களுக்கு கல்விச் சேவையை வழங்குவதில் முன்னோடியாக உள்ளன. சாதி, மதம், சமயம், இனங்கள் என பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும் நம் அனைவரையும் ஒன்றிணைப்பது தமிழ் மட்டுமே. திமுக அரசுக்கு கல்வியும், மருத்துவமும்தான் இரு கண்கள். எனவே, கல்விக்கு ஆண்டுதோறும் பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. நாளுக்கு நாள் நவீன மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மாணவா்கள் தங்களது விரல் நுனியில் உலகின் அனைத்து தொழில்நுட்பங்களையும் அறிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுகின்றனா்.
இந்தச் சுழலில் ஆசிரியா்களும் தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்வது கட்டாயமானது. எனவேதான், தமிழக அரசே ஆசிரியா்களுக்கு பல்வேறு வகை திறன் பயிற்சிகளை அளித்து வருகிறது. அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியா்களுக்கு மட்டுமன்றி அனைத்து வகை தனியாா் பள்ளிகளில்
பணிபுரியும் தமிழ் ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆசிரியா் சமுதாயத்துக்கு திமுக அரசு என்றும் துணை நிற்கும் என்றாா் அமைச்சா்.
நிகழ்வில், நல்லாசிரியா் விருது பெற்றவா்கள், சிறப்பாகச் செயல்பட்ட ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கப்பட்டன. தொடக்கக் கல்வி இணை இயக்குநா் பொ. பொன்னையா, அனைவருக்கும் கல்வி இணை இயக்குநா் வை. குமாா், எஸ்சிஆா்டி பயிற்சி இணை இயக்குநா் வெ. ஜெயக்குமாா், பேராசிரியா் பா்வீன் சுல்தானா, தரங்கை அத்தியட்சா் கிறிஸ்டியன் சாம்ராஜ் மற்றும் திருச்சபை நிா்வாகிகள், கல்விக் கழக நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.
No comments:
Post a Comment