Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் 2222 பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான அறிவிப்பில் பி.எட்., ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்ற பி.இ., பட்டதாரிகள் விண்ணப்பிக்க வாய்ப்பில்லாததால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர்கள் என 2222 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.ஆர்.பி., அக்டோபரில் வெளியிட்டது. டி.இ.டி., தாள் 2 தேர்ச்சி பெற்றோர் இத்தேர்வில் பங்கேற்க தகுதியானவர்கள். இதற்காக நவ., 1 முதன் ஆன்லைனில் விண்ணப்பிப்பது துவங்கியுள்ளது. நவ.,30 விண்ணப்பிக்க கடைசி தேதி. எழுத்து தேர்வு 2024, ஜன., 7 ல் நடக்கிறது.
இத்தேர்வுக்கு பி.இ., முடித்து பி.எட்., டி.இ.டி., தாள் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு விண்ணப்பிக்கும் வசதி இல்லை. தமிழக அரசு பொறியியல் பட்டதாரிகள் பி.எட்., படிக்கவும், அவர்கள் டி.இ.டி., தேர்ச்சி பெற்றால் 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு கணித ஆசிரியராக நியமிக்கப்படலாம் என 2018ல் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் பி.இ., முடித்த பலர் பி.எட்., படித்து டி.இ.டி., தாள் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றனர். ஆனால் டி.ஆர்.பி., தற்போது வெளியிட்டுள்ள ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையில் பி.இ., படித்தவர்களுக்கான வழிமுறை இல்லாததால் ஆயிரக்கணக்கான பி.இ., பட்டதாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து பி.இ., பி.டெக்., ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் கூறியதாவது:
தமிழக அரசு 2018 ல் வெளியிட்ட உத்தரவில் பி.இ., பி.டெக்., முடித்த எந்த பிரிவு பட்டதாரிகளாக இருந்தாலும் பி.எட்., (கணிதம், இயற்பியல் எடுத்து) படிக்க அனுமதிக்கப்பட்டது.
கம்ப்யூட்டர் சயின்ஸ் தொடர்புடைய பி.இ., - சி.எஸ்.இ., பி.டெக்., - ஐ.டி., படித்தவர்கள் பி.எட்.,ல் கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுக்கவும், பி.டெக்., பயோ டெக்., படித்தவர்கள் பி.எட்.,ல் உயிரியல் படிக்கவும் அனுமதிக்கப்பட்டது. இவர்கள் 6, 7, 8 ம் வகுப்பில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் பி.இ., பி.டெக்., முடித்து பி.எட்., டி.இ.டி., தேர்ச்சி பெற்று ஆயிரக்கணக்கானோர் பல ஆண்டுகளாக வேலைக்கு காத்திருக்கிறோம். ஆனால் தற்போது விண்ணப்பிக்கும் வாய்ப்பு இல்லை.
இது குறித்து டி.ஆர்.பி., அதிகாரிகளிடம் கேட்டால் பதில் அளிக்க மறுக்கின்றனர். எனவே ஜனவரியில் நடக்கவுள்ள பட்டதாரி ஆசிரியர் தேர்வில் எங்களையும் தகுதியுள்ளவர்களாக அறிவிப்பாணையில் திருத்தம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment