Join THAMIZHKADAL WhatsApp Groups
அனைத்து வகையான கார்களையும் போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய்ய அனுமதி அளித்து போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
புதிதாக வாங்கப்படும் வாகனங்கள் பதிவு செய்யப்படும் போது போக்குவரத்து வாகனங்கள், போக்குவரத்து அல்லாத வாகனங்கள் என பதிவு செய்யப்படும். மக்கள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக வாங்கும் வாகனங்கள், அதாவது தனி நபர் பயன்படுத்தும் இருசக்கர வாகனம், கார் உள்ளிட்டவை போக்குவரத்து அல்லாத வாகனங்கள் என பதிவு செய்யப்படும். இந்த வாகனங்களுக்கு வெள்ளை நிற நம்பர் பிளேட்டுகள் கொடுக்கப்படும்.
பொது போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் அதாவது பேருந்துகள், லாரிகள், சரக்கு வாகனங்கள், ஆட்டோ, வாடகை கார், டாக்ஸி உள்ளிட்டவை போக்குவரத்து வாகனங்கள் என பதிவு செய்யப்படும். இந்த வாகனங்களுக்கு மஞ்சள் நிற நம்பர் பிளேட்டுகள் கொடுக்கப்படும். இந்நிலையில், டாக்ஸியாக பயன்படுத்தப்படுவதற்கு பெரும்பாலும் குறிப்பிட்ட சில கார்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதாவது ஒவ்வொரு கார் நிறுவனமும் சொகுசு கார், அனைவரும் எளிதாக வாங்கக்கூடிய கார் என பல ரகங்களில் கார்களை விற்பனை செய்து வருகிறது.
இதில் சில குறிப்பிட்ட கார் வகைகள் மட்டுமே வாடகை வாகனமாக பதிவு செய்ய முடியும், சொகுசு கார்களை வாடகை வாகனமாக பதிவு செய்ய முடியாது. இந்த நடைமுறையை மாற்றம் செய்ய வேண்டும் என வாடகை கார் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், மற்ற மாநிலங்களில் சொகுசு கார்கள் வாடகை கார்களாக பயன்படுத்தப்படுகிறது. அதேபோன்ற நடைமுறையை தமிழகத்திலும் பயன்படுத்த வேண்டும் என வாடகை கார் ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் அனைத்து வகையான கார்களையும் போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து வட்டார போக்குவரத்து கழகங்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், ''சொகுசு கார்கள் உள்பட அனைத்துவிதமாக பயணிகள் வாகனங்களையும் போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய்யவும், மேலும் அந்த வாகனங்களுக்கு அனுமதி சீட்டினையும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இனி வரும் நாட்களில் அனைத்து வகை கார்களையும் பயன்படுத்த முடியும், மேலும் இதன் காரணமாக தமிழகத்தில் சுற்றுலா மேம்படும்'' என கூறப்பட்டுள்ளது. இனி அனைத்து வகை கார்களையும் மஞ்சள் நிற பதிவு எண் கொண்டு இயக்க முடியும்.
No comments:
Post a Comment