Join THAMIZHKADAL WhatsApp Groups
என் அம்மாவிற்கு வயது 60 ஆகிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு, கீழே விழுந்ததன் காரணமாக முதுகுத்தண்டுவட எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டு நான்கு மாதங்களாக ஓய்வில் இருந்தார்.
நான்கைந்து நாள்களாக தலைச்சுற்றல் இருந்தது, ரத்தப் பரிசோதனை செய்ததில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது தெரிய வந்தது. மருத்துவர் அறிவுரையின்படி இப்போது மாத்திரை எடுத்து வருகிறார். ஒருமுறை சர்க்கரை மாத்திரை எடுத்துக் கொண்டால் தொடர்ந்து ஆயுள் முழுவதும் சாப்பிட வேண்டுமா அல்லது சர்க்கரை அளவு கட்டுக்குள் இருந்தால் மாத்திரைகளை நிறுத்திவிடலாமா?
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி
டாக்டர் .சஃபி,M. சுலைமான்
உங்கள் அம்மாவின் வயது இந்தப் பிரச்னைக்கு ஒரு காரணம். தவிர முதுகுத்தண்டில் அடிபட்டதாகச் சொல்கிறீர்கள். அது இன்னொரு காரணம்.
ஒருவேளை அவர் உடலியக்கம் இல்லாமல் படுக்கையிலேயே இருந்தால் அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மருத்துவ மொழியில் இதை 'நான் ஆம்புலன்ட் டயாபட்டீஸ்' ( Non Ambulant Diabetes ) என்று சொல்வோம்.
நீரிழிவில் ஆம்புலன்ட் டயாப்ட்டிக், நான் ஆம்புலன்ட் டயாபட்டிக் என இருவகை உண்டு. அதாவது நீரிழிவு பாதித்த ஒரு நபர், நடமாடும் நிலையில் இருக்கிறார் என்றால் முறையான நடைப்பயிற்சி, உடற்பயிற்சிகள் செய்யவைத்து அவரது சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும். அதாவது வாழ்வியல் முறைகளைப் பின்பற்றச் செய்ய முடியும்.
அதுவே 'நான் ஆம்புலன்ட் டயாபட்டிக்' நிலையில் சம்பந்தப்பட்ட நபர் நடமாட முடியாத நிலையில் இருப்பார். மிகவும் வயதானவராக இருக்கலாம். அவருக்கு கால்களில் புண்கள் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களை உடயலிக்கம் மூலமாக ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கச் செய்வது சாத்தியமில்லை.
அந்த வகையில் உங்கள் அம்மாவுக்கும் உடலியக்கத்தின் மூலம் சர்க்கரையின் தீவிரத்தைக் குறைக்க வாய்ப்பில்லை. எனவே உங்கள் அம்மாவுக்கு நிச்சயம் முறையான நீரிழிவு சிகிச்சை தேவை.
உங்கள் அம்மாவுக்கு சிறுநீரக ஆரோக்கியம், தைராய்டு பாதிப்பு, இதய ஆரோக்கியம் போன்றவற்றைப் பார்த்து, கொலஸ்ட்ரால் அளவு டெஸ்ட் செய்யப்பட்டு, அதற்கேற்ற மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையோடு எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவரை சந்தித்து மருந்துகளில் மாற்றம் தேவையா என்பதையும் கேட்டுப் பின்பற்ற வேண்டும். மருந்துகளே இல்லாமல் சமாளிக்க நினைப்பது சரியானதில்லை. அது வேறு பெரிய பிரச்னைகளுக்கு காரணமாகலாம். நோயின் தன்மைக்கேற்ற சிகிச்சைதான் உங்கள் அம்மாவுக்கு சரியானது.
சர்க்கரை நோய்க்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் தேவையா என்பது நோயின் தன்மையைப் பொறுத்தது. பலருக்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் தேவைப்படலாம். சரியான வாழ்க்கைமுறை மற்றும் கட்டுப்பாடு இருந்தால் மாத்திரைகள் இல்லாமலும் நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
No comments:
Post a Comment