Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நிதியுதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவரால் தொடரப்பட்ட வழக்கில் பதவி உயர்வுக்கு TET தேர்ச்சி தேவை என்று தனி நீதிபதியும் பின்னர் இரண்டு நீதிபதிகள் அமர்வும் தீர்ப்பளித்த நிலையில் மூன்றாவது நீதிபதி நியமனம் செய்து விசாரணை மேற்கொள்ள
வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்தது. மூன்றாவது நீதிபதி இதுவரை நியமனம் செய்யப்படவில்லை.
இதற்கிடையில் டிட்டோஜேக் பேரமைப்பு சார்பில் 184 ஆசிரியர்களுக்கான வழக்கு விபரங்கள் வழக்கறிஞர் திரு.சங்கரன் அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. திரு. சங்கரன் அவர்களும் டிட்டோஜேக் சார்பில் வழக்கினை விசாரணைக்கு கொண்டுவர review petition தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் ஒரு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் இப்பொருள் சார்பாக வழக்குத் தொடுத்தது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசுதான் இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பள்ளிக்கல்வி ஆணையர் உரிய விபரங்களுடன் பதில்மனுதாக்கல் செய்யாமல் நீதிமன்றத்தின் இறுதி முடிவுக்கு கட்டுப்படுகிறோம் என்று தெரிவித்ததால் தான் நமக்கெதிரான தீர்ப்பு அளிக்கப்பட்டது.
டிட்டோஜேக் சார்பில் கடந்த 11.10.23 மற்றும் 12.10.23 தேதிகளில் முதலில் மதிப்பு மிகு.பள்ளிக் கல்வி இயக்குநர், மதிப்பு மிகு.தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோருடனும் அதன்பின் மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடனும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பணிமூப்பின் அடிப்படையிலேயே பதவி உயர்வு என்பதை தமிழக அரசின் கொள்கை முடிவாக உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்துவோம் என்று உறுதி டிட்டோஜேக் பேரமைப்பால் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழக அரசின் சார்பில் பணிமூப்பின் அடிப்படையிலேயே பதவி உயர்வு என்பதை வலியுறுத்தி கடந்த வாரம் பதில்மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் வழக்கினை விசாரணைக்கு ஏற்றால் டிட்டோஜேக் சார்பில் அவ்வழக்கில் நம்மை இணைத்துக் கொள்ள நமது வழக்கறிஞர் மூலம் ஏற்பாடு செய்துள்ளோம். மூத்த வழக்கறிஞர் திரு. வில்சன் உள்ளிட்டவர்கள் இவ்வழக்கில் நமக்காக ஆஜராவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை சென்னை உயர் நீதிமன்ற 3 நீதியரசர்களே விசாரிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தால் அதற்கும் நமது வழக்கறிஞர் குழு தயாராக உள்ளது என்பதை தகவலுக்காக தெரிவித்துக் கொள்கிறோம்.
- டிட்டோஜேக்
No comments:
Post a Comment