Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, December 31, 2023

புத்தாண்டு பலன்கள் 2024 - கன்னி ராசியினருக்கு எப்படி?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்) பெருந்தன்மையும் மற்றவர்களுக்கு இயன்ற அளவில் எல்லாம் உதவ வேண்டும் என்ற பேருள்ளம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே... உங்கள் பெருந்தன்மைக்கும் கவுரவத்திற்கும் குறை ஏற்படாமல் கவனித்துக் கொள்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மிகவும் நாணயமாக நடந்து கொள்வீர்கள். தெய்வ பக்தியிலும், தெய்வ பலத்திலும் சிறந்து விளங்குவீர்கள்.

இந்த ஆண்டில் குடும்பத்தில் பிள்ளை இல்லாதோருக்குப் புத்திர பாக்கியமும், மற்றவர்களுக்கு பேரக் குழந்தை பாக்கியமும் உண்டாகும். குடும்பத்திலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு உயரும். பாகப்பிரிவினை போன்றவைகளும் சுமுகமாக முடியும். வருமானம் சிறப்பாக அமையும். மனதிலிருந்த அழுத்தங்கள் விலகி தெளிவான சிந்தனையில் இருப்பீர்கள். வண்டி வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். அனுபவத்தின் மூலம் நிரந்தரமான முடிவை எடுப்பீர்கள். ஆன்மீகத்திலும், தர்ம காரியங்களிலும் ஈடுபாடு அதிகரிக்கும்.

உங்களின் திறமையால் புதிய நுட்பங்களைப் புரிந்து கொள்வீர்கள். உங்களின் தர்க்க ஞானமும் வெளிப்படும். பிள்ளைகளின் வழியில் முன்னேற்றம் உண்டாகும். உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுது போக்குவீர்கள். அதே நேரம், கவனம் சிதறாமல் உழைக்காவிட்டால் சரியான இலக்கை குறித்த நேரத்தில் அடைய முடியாமல் போகலாம். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களின் தேவைகளையும் சரியாக பூர்த்திச் செய்யுங்கள். அதோடு எவருக்கும் வாக்குக் கொடுக்காமலும், முன்ஜாமீன் போடாமலும், உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுக்காமலும் இருந்தால் நஷ்டங்களில் இருந்து தப்பிக்கலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு: உங்கள் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற சற்று அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் சுமூகமாக பழகுவீர்கள். எதிர்பாராத இடமாற்றம் உண்டு. பதவி உயர்வு சிறு தாமதத்திற்குப் பிறகு கிடைக்கும். பொருளாதார நிலை முன்னேறும். உங்கள் பணிகளில் தைரியமாகவும், பொறுமையாகவும் செயல்பட்டு நன்மதிப்பை பெறுவீர்கள். உங்கள் மேல் எவ்வித புகாரும் எழாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

வியாபாரிகளுக்கு: வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். வாடிக்கையாளர்களின் தேவைக்காக புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியில் உள்ள கடன் தொகைகள் வசூலாகும். கொள்முதலில் கவனம் தேவை. ஒன்றுக்கு இரண்டு முறை விசாரித்து கொள்முதலில் ஈடுபடவும். தரமான பொருட்களைப் பெறுவதில் அக்கறை காட்டுவது சிறந்தது. உங்களின் செயல்கள் சராசரியான வெற்றியைக் கொடுக்கும். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக கடையை அழகு படுத்துவீர்கள். சீரான வருமானத்தால் பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். கூட்டாளிகளிடம் எச்சரிக்கைத் தேவை.

கலைத்துறையினருக்கு: பல முயற்சிக்குப் பிறகு புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சக கலைஞர்களின் போட்டி உங்கள் வாய்ப்புகளுக்கு சவாலாக இருக்கும். எனினும் உங்கள் முயற்சியால் உங்களுக்கே வெற்றி கிடைக்கும். சில வாய்ப்புகள் உங்கள் பெயரை பிரபலப்படுத்தும். நிலுவையில் இருந்த பணம் வசூலாகும். கவலை வேண்டாம். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மாணவர்களுக்கு: படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. சிறு உடல் உபாதைகள் வரலாம். கவனமுடன் இருந்தால் அதைத் தவிர்க்கலாம். யோகா போன்ற பயிற்சிகளின் மூலம் ஞாபகத் திறனை பெருக்கிக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் முயற்சிகள் சில தடங்கல்களுக்குப் பிறகு நிறைவேறும்.

அரசியல்வாதிகளுக்கு: இந்த ஆண்டு உங்களுக்கு தேவையற்ற வீண் சோதனைகள் வரலாம். உங்களைப் பாராட்டியவர்களே இப்போது தரக்குறைவாக பேசலாம். மாற்று முகாம்களை சேர்ந்தவர்கள் உங்களை நாடி வருவார்கள். எந்த சூழ்நிலையிலும் மன உறுதியை விட்டுக் கொடுக்காமல் இருப்பது சிறந்தது. எதிர்பார்த்த பதவி கிடைக்கும். அதன் மூலம் பெருமையும் கிட்டும். எடுத்த பணிகளை குறைவின்றிச் செய்து வாருங்கள்.

பெண்களுக்கு: அவ்வப்பொது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உங்கள் விஷயத்தில் மூன்றாவது நபர் தலையீடு இருக்காமல் பார்த்துக் கொள்ளவும். உடல் சூழ்நிலை காரணமாக அதிக செலவு செய்ய நேரலாம். சுப நிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும். புதியதாக வாகன சேர்க்கை இருக்கும். சொந்தமனையில் குடியேறும் நீண்ட நாட்கள் கனவு நிறைவேறும்.

நட்சத்திர பலன்கள் 

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மனத்தில் இருந்து வந்த தேவையற்ற வீண் குழப்பங்கள் அகலும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போதும் நெருப்பினைப் பிரயோகப்படுத்தும் போதும் கவனம் அவசியம். தொழில் வியாபாரத்தில் நல்ல மாறுதல்களை உணர்வீர்கள். வெளிநாடு பயணம் செல்லலாம். பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.

அஸ்தம்: எதிர்பார்க்காத பணி இடமாற்றம் ஏற்படும். எந்த விஷயத்திலும் ஈடுபடும் போதும் நேர்மறை எண்ணங்களோடு ஈடுபடுவது நல்லது. கூடுமான வரை சோம்பேறிதனத்தை விடுவது நன்மை தரும். பொருளாதார நிலை மேலோங்கும். அரசு வழியில் அனுகூலம் கிடைக்கும். பெற்றோர் உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

சித்திரை 1, 2 பாதங்கள்: இந்த ஆண்டு குடும்ப நிம்மதியில் சில குழப்பங்கள் வரலாம். பிள்ளைகள் வழியில் சில கவலைகள் நேரலாம். பொருளாதார நிலை மேலோங்கும். நெருக்கடி நிலையிலிருந்து வெளியில் வருவீர்கள். தேவையற்ற விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கியிருப்பது நன்மை தரும். நண்பர்கள் உறவினர்கள் அனுசரனையாக இருப்பார்கள். வியாபாரிகள் அதிக அள்வில் முதலீடு செய்யும் முன் யோசித்து செய்யவும். தள்ளிப் போய் கொண்டிருந்த திருமணம் கைகூடும். அரசு வழியில் அனுகூலம் கிடைக்கும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று சேவிப்பது பாவங்களை போக்கும். சிக்கலான பிரச்சினைகள் தீரும். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் | 

சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீசாஸ்தாய நம” என்ற மந்திரத்தை தினமும் 5 முறை சொல்லவும் | 

விளக்கு பரிகாரம்: வீட்டில் பித்தளை ஐந்து முக விளக்கு நல்லெண்ணை மற்றூம் நெய் கலந்து ஏற்றவும் | 

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6, 9 | 

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் | 

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு | 

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், வியாழன் | + பதவி உயர்வு | - வீண் விரையம்

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News