Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, December 31, 2023

புத்தாண்டு பலன்கள் 2024 - விருச்சிகம் ராசியினருக்கு எப்படி?

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) நீங்கள் எதிலும் முன்னனி பெற்று விளங்குவீர்கள். வார்த்தைப் பிரயோகங்களில் கவனம் தேவை. மற்றவர்களுக்கான பணிகளை முன்நின்று நடத்துவீர்கள். உங்கள் சொந்த பணிகளில் சற்று சுணக்கம் காணப்படும். கவனம் தேவை. எதையும் முன்கூட்டியே அறியும் ஆற்றல் உள்ளதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். தெய்வ பலம் உங்களை வழிநடத்தும்.

இந்த ஆண்டில் உங்களுக்கு உதவி செய்திட பலரும் முன்வருவார்கள். மனதை அரித்துக் கொண்டிருந்த பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வுத் தெரியும். செய்தொழிலில் சிறிது தேக்கநிலை இருந்தாலும் வருமானத்திற்குக் குறைவு வராது. புதிய முயற்சிகளும் ஓரளவுக்குக் கைகொடுக்கும். உங்கள் செயல்களுக்குப் புதிய அங்கீகாரம் கிடைக்கும். திருமணப் பிரச்சினை, குடும்பப் பிரச்சினை ஏற்பட்டாலும் முடிவு சாதகமாக இருக்கும். மற்றபடி வெளியூரில் இருந்து மனதிற்கு நம்பிக்கை ஊட்டும் செய்திகள் வந்து சேரும். மேலும் பழைய கடன்பாக்கிகளும் வசூலாகும்.

புதுப்புதுப் பிரச்சினைகளுக்கு நூதனமாகக் சிந்தித்து முடிவு காண்பீர்கள். அதே நேரம், குடும்பப் பிரச்சினைகளில் மூன்றாம் மனிதர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். ஏனென்றால், நீங்கள் நம்பியவர்களாலேயே ஏமாற்றப்படலாம். அதனால் உங்களுக்குக் கீழ்வேலை செய்பவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்துக் கொள்ளுங்கள். மேலும் தீயோரின் சகவாசத்தை அடியோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அதோடு பாகப்பிரிவினைகளை துரிதப்படுத்தாமல் தாமதப்படுத்துங்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு: நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். இதுவரை குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்த சிலர் இப்போது குடும்பத்துடன் சேரும் வாய்ப்பு கிடைக்கும். சக பணியாளர்களின் நட்புறவு உங்கள் பணிகளைக் குறைக்கும். பொருளாதார உயர்வு இருக்கும். எனினும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சகஊழியர்களிடம் ஒற்றுமையாகப் பழகவும். மேலதிகாரிகளால் சிறு உபத்திரவங்கள் இருப்பினும் அதனால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது. வேலைப்பளு கூடினாலும் தேவைக்கேற்ப சகஊழியர்கள் உதவுவர். அலுவலக வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பயணங்களால் எதிர்பார்த்த லாபங்களைப் பெறுவர். ஊதிய உயர்வும் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு: உங்கள் கடின முயற்சியால் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய கிளைகள் திறப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். ஜவுளி வியாபாரிகள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். வசூல் செய்வதில் சிறிது கவனத்துடன் இருப்பது அவசியம். படிப்படியான வளர்ச்சி நிலை உங்கள் தொழிலில் உண்டு. வேலையாட்களால் சிறுசிறு பிரச்சினைகள் காணப்படும். எனினும் சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கிடைக்கும். எனவே கடன் பெறுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்து திருப்தி காண்பீர்கள்.

கலைத்துறையினருக்கு: புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரநிலை உயர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சககலைஞர்களிடம் பகைமை இன்றி சுமூகமாகப் பழகி வருவது அவசியம். சிலருக்கு விருதுகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள்.

மாணவர்களுக்கு: உங்கள் படிப்பு ஆர்வம் நாளுக்கு நாள் முன்னேற்றமடையும். கல்வி நிலையங்களில் சக மாணவர்களிடம் சண்டையிடுவதை தவிர்ப்பது நலம். விளையாட்டு மற்றும் பிற விஷயங்களில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி பாரட்டுகளைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு: உங்கள் பொறுப்பான் பணிகளுக்காக தலைமையின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலும் அவர்களின் தனிப்பட்ட அபிமானத்தையும் பெற்று மகிழ்வீர்கள். உங்கள் வளர்ச்சியைக் கண்டு உங்களுடன் உள்ள சிலரே பொறாமைப்படுவார்கள். புதிய முயற்சிகளில் திட்டமிட்டுச் செய்தால் வெற்றி உண்டு.

பெண்களுக்கு: குடும்ப முன்னேற்றத்தில் உங்கள் சாமர்த்தியமான போக்கு பெரிதும் பயன்படும். தாமதமாகி வந்த சிலரின் திருமணம் இப்போது முடியும். மனம்போல் மாங்கல்யம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு.

நட்சத்திர பலன்கள்

விசாகம் 4ம் பாதம்: இந்த ஆண்டு தொழில், வியாபாரம் போன்றவற்றில் பெரும் ஆதாயங்களைப் பெறும் வழியுண்டு. குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு ஆண் குழந்தை பாக்கியம் உண்டாகும். பணப்புழக்கம் திருப்திகரமாகவே இருக்கும்.

அனுஷம்: இந்த ஆண்டு உத்தியோகத்தில் மேன்மையான நிலை அமையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப நிலையில் குதூகலம் நிரம்பிக் காணப்படும். புத்திர வழியில் சிறு சிக்கல் ஏற்பட்டு நிவர்த்தியாகும். சிலருக்கு கை, கால்களில் வலி போன்ற சிறு தொல்லைகள் ஏற்பட்டு குணமாகும்.

கேட்டை: இந்த ஆண்டு குடும்பத்தில் பெரிதும் அக்கறை செலுத்த வேண்டிய காலமிது. யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்து போடவோ முயற்சி செய்யாதீர்கள். குடும்பத்தில் நிம்மதியான போக்கு காணப்படும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய்கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும் | 

சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் தும் துர்க்காயை நம” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும் 

விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் நெய் விட்டு ஒரே ஒரு ஐந்து முக மண் அகல் விளக்கு ஏற்றி வழிபடவும் 

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 7, 9 

அதிர்ஷ்ட ஹோரைகள்: ஞாயிறு, செவ்வாய், குரு 

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு 

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், புதன், வியாழன் | + உண்மையை உணர்தல் | - எடுத்த காரியங்களில் சுணக்கம்
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News