Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, December 31, 2023

புத்தாண்டு பலன்கள் 2024 - கடகம் ராசியினருக்கு எப்படி?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கற்பனை வளம் மிக்கவர்களாகிய நீங்கள் எல்லாத்துறையில் பிரகாசமான வாய்ப்புகளைப் பெறக் கூடியவர்கள் என்பதால் உங்கள் படைப்புகளை வெளியிட்டோ, திரைப்பட வசனகர்த்தா, பாடலாசிரியர் போன்ற வாய்ப்புகளை பெற்றோ பிரபலமும் புகழும் அடைவீர்கள். இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமல் சில நேரங்களில் குழப்பத்துக்கு ஆட்பட்டு அல்லல்படுவது உங்களிடம் அமைந்துள்ள பெரும் குறை. எதிலும் சிந்தித்து முடிவெடுத்து அதன்படி திட்டமிட்டு செயல்படுவதால் வெற்றி காண முடியும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டு அதன்படி நடந்து கொண்டால் வேதனைக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு வெற்றிப் புன்னகை புரியலாம்.

இந்த ஆண்டு காரியங்களைத் தைரியமாக செய்து முடிப்பீர்கள். மேலும் உங்கள் எண்ணங்களை தைரியமாக வெளிப்படுத்துவீர்கள். அவசியமற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்புகளை உயர்த்திக் கொள்வீர்கள். தன்னம்பிக்கையுடன் காரியமாற்றுவீர்கள். சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்கிற பழமொழிக்கேற்ப அனைவரிடமும் பக்குவமாகப் பேசிப் பழகி உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும். மற்றபடி புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். உங்கள் நிர்வாக ஆற்றல் அதிகரிக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பு தானாகவே கிடைக்கும். சுறுசுறுப்புடன் இயங்குவீர்கள். சிலருக்கு வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்று வசிக்கும் யோகமும் உண்டாகும். உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியம் சூழும். அதேநேரம் எல்லாம் சரியாக நடந்து விடும் என்று நினைத்துக்கொண்டு அலட்சியமாக இருந்தால் தோல்வியைச் சந்திப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு: உங்கள் அலுவலகப் போக்கில் உங்களுக்கு மிகத் திருப்திகரமான பலன்கள் ஏற்பட வாய்பில்லை என்றாலும் பெரும் சங்கடங்கள் எதுவும் ஏற்பட்டுவிடவும் வாய்ப்பில்லை என்ற அளவில் ஆறுதலடையாலம். உங்கள் பணிகளில் நீங்கள் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருவது அவசியம். அரசு பணியில் இருப்பவர்களுக்கு பெரும் சிக்கல்கள் இருக்காது என்றநிலையில் தனியார்துறையில் பணிபுரிவர்களுக்குப் பிரச்சினைகள் அவ்வப்போது ஏற்பட்டு பிறகு நிவர்த்தியாகும். சக பணியாளர்களுடன் சுமூகமாக நடந்து கொள்வது அவசியம். அதனால் உங்கள் பணிப் பளுவையும் குறைத்துக் கொள்ள முடியும். எதிர்பாராத இடமாற்றங்களால் சிலர் குடும்பத்தைவிட்டு பிரிந்திருக்க நேரலாம் நேரலாம். உடல்நலத்திலும் அடிக்கடி சிறுகுறைபாடுகள் ஏற்பட்டு நிவர்த்தியாகும்.

வியாபாரிகளுக்கு: வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவு உங்களுக்கு இருந்து வரும் வகையில் நீங்கள் செயல்படுவது முதல் தேவையாகும். கொள்முதல் செய்யும் போது தரமான பொருள்களை மட்டுமே கொள்முதல் செய்வது மிக அவசியம். அதே போல தேவைக்கேற்ப அவ்வப்போது வாங்கிக் கொள்வதே சிறப்பாகும். ஒரே நேரத்தில் மொத்தமாக வாங்க வேண்டுமென்பதற்காக வாங்கி அதிக அளவில் பொருள்களை இருப்பு வைப்பதைத் தவிர்ப்பதன் மூலம் பெரும் விரயங்களைத் தவிர்த்து விடலாம். மற்றபடி வியாபாரத்தில் பெரும் முன்னெற்றம் இருப்பதற்கில்லையென்றாலும் நஷ்டம் ஏற்படாதென்பதால் கவலை வேண்டாம். மேலும் பணம் புழங்கும் இடங்களில் உங்களுக்கு நம்பிக்கையுள்ளவர்களையே அமர்த்துவதும் மிக முக்கியமாகும். உங்கள் நேரடி கவனமும் அடிக்கடி இருந்து வருவது நல்லது. போட்டி நிறுவனங்களின் எதிர்ப்புகள் பலமாகவே இருக்குமாயினும் உங்கள் சமயோஜித புத்தியினால் சமாளிப்பது நல்லது. கூட்டாளிகள் இருப்பவர்களாயின் அவர்களிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

கலைத்துறையினருக்கு: உங்கள் தொடர்ச்சியான முயற்சிகளால் மட்டுமே புதிய வாய்ப்புகளைப் பெற முடியும் என்ற நிலை உள்ளதால் நீங்கள் சோர்வுக்கு இடம் தராமலும், மற்றவர்களை நம்பாமலும் நீங்களே நேரிடையாகப் பார்க்க வேண்டியவர்களை பார்த்து பேசுவதுதான் உங்களுக்கு வெற்றி தரக்கூடும். ஓரளவு சோர்வடைந்தாலும் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தத் தவறினாலும் வாய்ப்புகள் கைநழுவிப் போய்விடக்கூடும். எனவே உங்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்வதிலேயே உங்கள் முழு கவனமும் இருந்து வர வேண்டும். சக கலைஞர்களைப் பகைத்துக் கொள்ளாமல் சுமூகமாகப் பழகி வருவதும் அவசியம். நடனம், ஸ்டண்ட் போன்ற துறை கலைஞர்கள் கூடுதல் வாய்ப்பைப் பெறக்கூடும். வெளியூர் பயணங்களின் போது கவனம் தேவை. புதிய படங்களுக்கான வாய்ப்புகள் சிலருக்குக் கிடைக்கக்கூடும்.

மாணவர்களுக்கு: விளையாட்டு போன்ற துறைகளில் உங்களுக்கு ஆர்வம் இருக்குமாயினும் படிப்பில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம். மின்னணுத்துறை கல்வியில் சிலர் வாய்ப்பு பெறக்கூடும். ஜாதகப்படு தசாபுத்தி பலன்கள் பலமாக அமையப் பெற்றவர்கள் மட்டுமே உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுவது சாத்தியமாகும். சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று ஹாஸ்டல்கள் போன்றவற்றில் தங்கிப் படிக்க நேரலாம். அத்தகையவர்கள் படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. அரசின் கல்வி சலுகைகள் கிடைப்பதில் கூட சிரமங்கள் ஏற்படக்கூடும். சிலர் மேற்படிப்பை தொடர முடியாமல் வாய்ப்புகளைத் தேடவும் முயல்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு: உங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றி தலைமையின் பாராட்டுகளைப் பெறுவது இப்போதைய நிலையில் மிகக் கடினமான இருக்ககூடும். இருப்பின் மாற்று முகாம்களுக்குத் தாவும் எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் உறுதியான விசுவாசத்துடன் இருந்து வருவதே எதிர்கால நன்மைகளுக்கு வழி வகுக்கும். பொறுமையாக இருந்து உங்கள் பணிகளை பழுதில்லாமல் செய்து தலைமையின் நன்மதிப்பையும் தொண்டர்களின் ஆதரவையும் பெறுவதற்கு கடினமான உழைப்பு தேவை என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. சிலர் மிகப்பெரும் பொறுப்பான பதவிகளைப் பெற்று மகிழவும் வாய்ப்பு உண்டு. தலைமையின் நன்மதிப்பையும் ஆதரவையும் பெற உங்கள் கடினமான தொண்டு மட்டுமே இப்போது முக்கியமாகும்.

பெண்களுக்கு: இதுவரை பல காரணங்களால் தள்ளிப்போய் வந்த சிலரது திருமணம் நிறைவேற வாய்ப்புண்டு. மறைமுக சேமிப்புகளில் ஓரளவு பணம் சேரும் என்பதாலும் அது உங்கள் கணவரின் பணத்தட்டுபாட்டை நீக்கும் வகையில் அவருக்குத் தக்க சமயத்தில் பயன்படக்கூடிய வகையில் அமையும். பூர்வீகச் சொத்து மூலம் சிலருக்கு தனவரவு ஏற்படக்கூடும். வேலைகளின் காரணமாக பிரிந்திருந்த தம்பதி சேர்ந்து வாழும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். தேவையற்ற மனக்குழப்பங்களை விட்டுவிடுவது நல்லது. உடல்நலத்தில் கவனம் தேவை. சிறு உபாதைகளின் அறிகுறி தெரியும் போதே சிகிச்சை பெறுவதன் மூலம் வயிற்றுக் கோளாறு போன்றவற்றுக்கான மருத்துவச் செலவைக் கட்டுபடுத்த முடியும். வேலைக்குப் போகும் பெண்கள் குறிப்பிட்ட நேரத்தில் உணவு பழகத்தை கடைபிடிக்கவும்.

நட்சத்திர பலன்கள்

புனர்பூசம் 4ம் பாதம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்த எல்லாப் பிரிவினருக்குமே ஏற்றமும் இறக்கமும் கூடிய நிலையே இருந்து வரும். எதிலும் எடுத்த எடுப்பிலேயே வெற்றியை எதிர்பார்க்க முடியாது என்பதால் தொழில் , வியாபாரம் போன்ற எதுவாயினும் பெரும் ஆதாயங்களை நீங்கள் எதிர்பார்ப்பதற்கில்லை. குடும்ப நிலையிலும் நிம்மதி குறைந்து காணப்படலாம். சுபநிகழ்ச்சி தொடர்பான முயற்சிகளில் தடங்கலுக்குப் பிறகு வெற்றி கைகூடும். பெரும்பாலும் கவலைகள் அதிகமாகவும் களிப்பு குறைவாகவும் காணப்படும் என்றாலும் மனச்சோர்வுக்கு இடம் கொடுக்காமல் இறைவழிபாட்டின் மூலம் மன அமைதியும் நிம்மதியும் காணலாம். தெய்வபலம் துணை நிற்கும்.

பூசம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நிதானமான மனப்போக்கு தேவை. சகோதர வழியில் சங்கடங்களைச் சந்திக்க நேரும். குடும்பத்தினரிடம் மனகசப்பு கொள்ளும் சூழ்நிலையில் மனஅமைதி இழக்கும் நிலை ஏற்படுமாயினும் அது சிறிது காலத்தில் மாறிவிடும் நிலை உள்ளாதால் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் நிதானமாக இருந்து வாருங்கள். பெரும்பாதிப்பு எதுவும் நேர்ந்து விடாது. இறைவழிபாட்டில் மனதைச் செலுத்தி பொறுமையுடன் செயல்பட்டு வருவதே இப்போதைக்கு நன்மை அளிக்கக் கூடியதாகும். தொழில் வியாபாரத்தில் அகல கால் வைக்காமல் இருப்பது உத்தமம்.

ஆயில்யம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் மாறிமாறி வரக்கூடிய நிலை உள்ளதால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்து வருவது நல்லது. என்றாலும் எந்த முயற்சியில் ஈடுபடும் போதும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து திட்டமிட்டு அதன் பிறகே செயல்படத் தொடங்குவது அவசியம். தொழில் வியாபாரத்தில் வேலையாள்களால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்ற நிலை உள்ளதால் அவர்களிடம் கனிவாக நடந்து கொள்வதன் மூலம் பிரச்சினைகள் குறையும். அரசு வழியில் சிலருக்கு சிக்கல்கள் ஏற்பட இடமுண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை. கண்ணில் சிலருக்கு கோளாறுகள் ஏற்பட்டு சிகிச்சைக்குப்பின் குணமாகும். சிலருக்கு திடீர் தனவரவு உண்டாக வாய்ப்புண்டு, வாகனப் பழுது பார்ப்புச் செலவு சிலருக்கு ஏற்படக்கூடும். நெருப்பு அருகில் பணிபுரிபவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

பரிகாரம்: துர்க்கை அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும் 

சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீகர்ப்பாயை நம” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும் 

விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் தாமரைத் திரியில், நான்கு ஒரு முக மண் அகல் விளக்கு நெய் விட்டு ஏற்றவும் 

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 7 

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், சுக்கிரன், குரு 

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு 

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, திங்கள், வியாழன்; தேய்பிறை: ஞாயிறு, திங்கள் | + சுப நிகழ்ச்சிகள் | - கொடுத்த வாக்கில் சுணக்கம்

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News