Join THAMIZHKADAL WhatsApp Groups
எம்பிபிஎஸ் படித்து முடித்த மாணவர்கள் லைசென்ஸ் பெற்று மருத்துவ தொழில் செய்ய எக்ஸிட் டெஸ்ட் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவித்ததை தொடர்ந்து தற்போது ஆயுஷ் படிக்கும் மாணவர்களும் எக்ஸிட் டெஸ்ட் எழுத வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு ஒன்றிய அரசின் கெஸட்டில் வெளியாகியுள்ளது. நாட்டில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் முதலில் நீட் தேர்வு எழுதிய பின் மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில் சேர முடியும். அதைத் தொடர்ந்து நான்கரை ஆண்டுகள் படித்து முடித்ததும் 1 ஆண்டு அந்த மாணவர்கள் பணியிடைப் பயிற்சி பெற வேண்டும்.
அதற்கு பிறகு அவர்களுக்கு சான்று வழங்கப்படும். இது தவிர வெளிநாடுகளில் சென்று மருத்துவப் படிப்பு முடித்து இங்கு வரும் மாணவர்கள் தேசிய மருத்துவ ஆணையம் நடத்தும் எக்ஸிட் டெஸ்ட் எழுதி தேர்ச்சி பெற்ற பிறகு தான் இங்கு அவர்கள் லைசென்ஸ் பெற்று மருத்துவ தொழில் செய்ய முடியும். இந்நிலையில், இந்திய தேசிய மருத்துவ ஆணையம் கடந்த ஜூன் மாதம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் எம்பிபிஎஸ் படித்து முடித்த மாணவர்களும் எக்ஸிட் டெஸ்ட் எழுத வேண்டும். முதுநிலை பட்டப் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களும் எக்ஸிட் டெஸ்ட் எழுதி முடித்தால் தான் முதுநிலை படிப்புகளில் சேர முடியும். என்றும் அறிவித்தது.
இந்த அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி கெஸட்டில் வெளியானது. இதனால் எம்பிபிஎஸ் மாணவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், ஆயுஷ் அமைப்பின் கீழ் வரும் ஆயுர்வேதம், சித்தா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகள் தொடர்பான படிப்புகளை படிக்கும் மாணவர்களும் தேசிய மருத்துவ ஆணையம் நடத்தும் எக்ஸிட் டெஸ்ட் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும் 22.12.2023 தேதியிட்ட கெஸட்டில் அறிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு: இந்த டெஸ்ட் எழுதி தேர்ச்சி பெற்றால் தான் இந்திய மருத்துவ முறையின் அந்தந்த துறையின் மருத்துவ பயிற்சியாளராக பயிற்சி பெற உரிமம் வழங்கப்படும்.
மேலும் இந்திய மருத்துவ முறையின் பதிவு செய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளராகவும் மாநில பதிவு அல்லது தேசிய பதிவேட்டில் பதிவு செய்வதற்கு இந்த எக்ஸிட் டெஸ்ட் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்த டெஸ்ட் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது ஆகஸ்ட் மாதங்களில் வழக்கமாக நடத்தமாக நடத்தப்படும். இந்த தேர்வு எழுத விரும்பும் ஆயுஷ் மாணவர்கள் குறைந்தபட்சம் 270 நாட்கள் இன்டர்ன்ஷிப் முடித்த பயிற்சியாளராகவோ அல்லது ஆயுவர்வேதா, சித்தா, யுனானி பட்டதாரிகள் ஒரு வருட கட்டாயப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். இந்த டெஸ்ட் எழுதி தேர்ச்சி பெறாத ஆயுவர்வேத பட்டதாரிகள், சித்தா பட்டதாரிகள், யுனானி பட்டதாரிகள் மாநிலத்தில் மருத்துவம் செய்ய தகுதியற்றவர்கள்.
இந்த தேர்வு எழுத கால வரம்பு ஏதும் இல்லை. தேர்வில் 50 சதவீதம் அல்லது அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெறுவோர் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் பட்டப்படிப்பு, மருத்துவப் பதிவு ஆகியவை அனைத்து வேலை வாய்ப்புகள், கல்வி கற்றல் போன்றவற்றின் போது பரிசீலிக்கப்படும். இது மருத்வத் தொழில் செய்வதற்கும், வேலை பெறுவதற்கும் இன்றியமையாதது. இவ்வாறு தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment