Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, January 5, 2024

+2 பொதுத்தேர்வு.. பயமோ.. பதற்றமோ வேண்டாம்.. மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் சொன்ன அட்வைஸ்

ப்ளஸ் 2 பொதுத்தேர்வுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் பயமோ, பதற்றமோ இன்றி தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. மார்ச், ஏப்ரல் மாதம்தான் பொதுத்தேர்வு காலம் என்றாலும் செய்முறை தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள் அடுத்தடுத்து ஆரம்பமாகி விடும். பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு மாணவ, மாணவிகளிடையே ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.'

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 12ஆம் வகுப்பு மாணவர்கள் மத்தியில் பேசினார். உங்களுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறீர்கள். 12ஆம் வகுப்பு என்பது மிகவும் முக்கியமானது. 11ஆம் வகுப்பு வரை நீங்க என்ன படிச்சீங்க, மார்க் வாங்குனீங்க என்று யாரும் கேட்க மாட்டார்கள்.

+2வில் நீங்கள் எப்படி படித்து என்ன மதிப்பெண் பெற்றீர்கள் என்று காலத்திற்கும் கேட்பார்கள். இன்னும் இரண்டு மாதம்தான், மார்ச் 1, பொதுத்தேர்வு ஆரம்பித்துவிடும். ரிவிஷன் தேர்வில் இத்தனை மாதமாக நீங்கள் படித்தவைகளை ரிவைஸ் செய்ய வேண்டும். திருப்புதல் தேர்வில் உங்களுடைய முழு திறமையை காட்டுங்கள். உங்களுக்கு என்ன சந்தேகம் வந்தாலும் ஆசிரியர்களிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.

எந்த ஒரு சந்தேகமாக இருந்தாலும், ஆசிரியர்களிடம் கேளுங்கள். உங்களுடைய அனைத்து சந்தேகங்களையும் ஆசிரியர்கள் தீர்த்து வைப்பார்கள். பயப்பட வேண்டாம்.. பதற்றப்பட வேண்டாம். உங்களுடைய பயத்தை குறைப்பதற்காகத்தான் அரையாண்டு தேர்விலேயே முழு போர்சன்களும் வைக்கப்பட்டு விட்டது. மார்ச் 1 பொதுத்தேர்வுக்கு செல்லும் உங்களுடைய முழு கவனமும் படிப்பில் மட்டுமே இருக்க வேண்டும்.

நன்றாக படித்து நல்ல மதிப்பெண்களை பெற்று கல்லூரியில் சேர்வதை இலக்காக கொண்டு படியுங்கள். கல்லூரியில் சேர்ந்து படித்து அங்கு நடைபெறும் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் நல்ல வேலையில் சேரலாம். அதற்கான முதல் படி இந்த பிளஸ் 2தான். எனவே முழு திறமையை காட்டி பிளஸ் 2 தேர்வுகளை எழுதுங்கள் ஆல் தி பெஸ்ட் என்று கூறினார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. மார்ச் 5 ஆங்கிலம், மார்ச் 8 கணினி அறிவியல், உயிரி அறிவியல், புள்ளியியல், மார்ச் 11 வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், மார்ச் 15ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், மார்ச் 19ஆம் தேதி கணிதம், விலங்கியல், நுண் உயிரியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு தேர்விற்கும் போதிய அவகாசம் அளிக்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News