Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி கற்பித்தல் முறையில் கொண்டு வருவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பள்ளிகளில் அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வரும் நிலையில் வருகிற கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மேலும் பல வசதிகளை செய்து கொடுக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் அரசு நடுநிலைப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு பள்ளிகளிலும் ஹைடெக் லேப் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைக் கூடத்தை பராமரிக்க கம்ப்யூட்டர் ஆசிரியர் ஒருவரும் நியக்கப்படுகிறார்.
இண்டர்நெட் வசதியுடன் இந்த ஹைடெக் லேப் அமைக்கப்பட உள்ளது. இதற்கு சுமார் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு பள்ளிக்கு ஹைடெக் லேப் அமைக்க ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரைவில் இந்த பணி தொடங்கப்பட உள்ளது.
இதைப் போல 20 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களின் கல்வி ஆற்றலை பெருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பு அமைய உள்ளது.
திரை மற்றும் புரஜெக்டருடன் கம்ப்யூட்டர் வசதியும் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு எளிதான முறையில் பாடங்களை கற்பிக்க முடியும்.
இது தவிர தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கும் திட்டமும் ஜூன் மாதத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் திறனை வளர்க்க முடியும். ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள திரையின் மூலம் மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்து கொள்ளலாம்.
அந்த அடிப்படையில் தொடக்கக் கல்வித் துறையில் இந்த புதிய திட்டங்களை வருகிற கல்வியாண்டில் செயல்படுத்த டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த திட்டங்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:-
தொடக்க கல்வித் துறை யின் தரத்தை உயர்த்தும் வகையில் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. மாணவர்களின் இடைநிற்றல் தவிர்க்கப்படுவதோடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
எண்ணறிவும் எழுத்தறிவும் வளர்ச்சி அடைவதோடு மாணவர்களின் கல்வித் திறனும் உயரும். வருகிற கல்வியாண்டில் இந்த புதிய திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன.
No comments:
Post a Comment