Join THAMIZHKADAL WhatsApp Groups
தீயணைப்புத்துறை அதிகாரி தொடர்ந்த வழக்கில், அரசு பணிகளில் பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி முறையில் மாற்றம் செய்த அரசாணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மணலியை சேர்ந்தவர் ஜி.சத்தியநாராயணன்.
தீயணைப்புத்துறை இணை இயக்குநரான இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணைய தேர்வில் தேர்ச்சி பெற்று திருப்பூர் மண்டல தீயணைப்பு அதிகாரியாக பணியில் சேர்ந்தேன்.பின்னர் தீயணைப்பு துறையில் மத்திய மண்டல துணை இயக்குநராக பதவி உயர்வு பெற்றேன்.
தொடர்ந்து கோவையில் மேற்கு மண்டல இணை இயக்குநராக பதவி உயர்வு பெற்றேன். எனக்கு கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்படும் நிலையில் பணிமூப்பு முறையை மாற்றம் செய்து தமிழக உள்துறை 2023 ஜூலையில் அரசாணை பிறப்பித்தது. இதனால், எனது பதவி உயர்வு பாதிக்கப்பட்டுள்ளது.
பின்தங்கிய சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு உரிய ஒதுக்கீடு தராததால் என்னைவிட குறைந்த பணிமூப்புள்ளவர்கள் பெரிய பதவிக்கு வந்துவிடுகிறார்கள்.எனவே, சமூக, பொருளாதார கட்டமைப்பிற்கு உட்பட்டு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதை உச்ச நீதிமன்றமும் பல வழக்குகளில் வலியுறுத்தியுள்ளது.
இந்த அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்பு தமிழக அரசு பதவி உயர்வுகளில் உரிய ஒதுக்கீடு நடைமுறைகளை கடைபிடித்து வந்தது. எனவே, சமூக கட்டமைப்புக்கு எதிராக 2023 ஜூலை 10ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
எனக்கு, தீயணைப்பு துறையில் இணை இயக்குநராகவோ அல்லது அதே அந்தஸ்தில் வேறு துறையிலோ பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.விஜயேந்திரன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பிப்ரவரி 5ம் தேதிக்குள் பதில் தருமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்டார். அதுவரை அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment