Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, January 28, 2024

கல்வித்துறையில் புதிய உத்வேகம் - அதிரடி மாற்றங்கள் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர்

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, கல்வித்துறைக்கு புதிய உத்வேகம் கொடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு அத்துறையின் அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நியமித்தார்.

இளம் அதிகாரிகளையும் நியமித்தார். கல்வித்துறை வளர்ச்சி குறித்து அடிக்கடி விசாரித்தும், ஆலோசனை நடத்தியும் வருகிறார். கடந்த ஆட்சியில் கல்வித்துறை புரோக்கர்களின் மயமாக, பணம் கொடுத்தால்தான் பணி மாறுதல் என்ற நிலை இருந்தது. தற்போது பணி மாறுதல்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடக்கிறது.

காலிபணியிடங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு, பணி மாறுதல்களும் கலந்தாய்வு அடிப்படையில் நடத்த உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் கல்வித்துறையில் மேலும் புதிய யுக்தியை கையாள பள்ளிக்கல்வித்துறை செயலாளராக குமரகுருபரனை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்தார்.

அவர் பொறுப்பேற்ற பின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதேநேரத்தில், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் தனது நடவடிக்கைகளை அமைத்துள்ளார். அவரது அறைக்கு யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சென்று குறைகளை கூறலாம் என்று அறிவித்தார்.

இதனால் தினமும் ஏராளமான ஆசிரியர்கள், கல்வியாளர்கள் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தியும், உதவிகளை பெற்றும் வருகின்றனர். இதனால் தற்போது கல்வித்துறையில் பெரும்பாலான குறைபாடுகள் களையப்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்வித்துறையில் அதிரடி மாற்றத்துக்கான அரசாணையை குமரகுருபரன் பிறப்பித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களிடையே பொது மாறுதல்கள் வழங்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய கொள்கை நெறிமுறைகள் வகுக்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி இயக்ககத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பிடும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் வகுத்து அறிவுறுத்தல் வழங்கி ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் உள்ள அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் பணிநாடுநர்களில் இருந்து நேரடி பணி நியமனம் செய்யும்போது, பின்பற்றப்பட வேண்டிய கால அட்டவணையை கீழ்க்கண்டவாறு வெளியிட்டு அரசு ஆணையிடுகிறது.

அதன்படி, பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிடங்களை வருகிற மே 1க்குள் கணக்கீடு செய்ய வேண்டும். அவர்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்வது மே 31க்குள் நடக்க வேண்டும், அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 30க்குள் நடத்தி முடிக்க வேண்டும், பட்டதாரி ஆசிரியர் காலி பணியிட மதிப்பீட்டை ஜூலை 1க்குள் முடிக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பிட கோரும் கருத்துருக்கள் இருந்தால் அதனை அரசுக்கு ஜூலை 15க்குள் அனுப்ப வேண்டும்.

அதன் மீது அரசாணை செப்டம்பர் 30க்குள் வெளியிடப்பட வேண்டும், நேரடி பணி நியமனம் செய்யப்படும் உத்தேச பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய குழு மற்றும் நிதித்துறை உறுப்பினரின் ஒப்புதலை உறுதி செய்த பின் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுகள் 2024 ஜூன் 31க்குள் முடிக்க வேண்டும். முடிவுகள் ஏப்ரல் 30க்குள் வெளியிடப்பட வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் இறுதி பட்டியலை மே 1 முதல் 31க்குள் வழங்க வேண்டும்.

இந்த அரசாணையை பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தலைவர், தேர்வு வாரியம் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் வெளிப்படைத் தன்மை கொண்டு வந்து இதுபோன்ற அரசாணை இதுவரை வெளியிடப்பட்டது இல்லை.

தற்போது வெளியிடப்பட்டுள்ளதால் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள், பட்டதாரிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

* 2800 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்கள் குறித்து பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதனால் புதிய ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை.

பள்ளி கல்வித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டதும் நீதிமன்ற வழக்குகளில் தடை ஏதும் இல்லாததால் உடனடியாக 2800 புதிய பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நியமனத்துக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

அதற்கும் சிலர் நீதிமன்றத்தில் தடை பெற முயன்றனர். ஆனால் அந்த தடைகளை உடைத்து தற்போது பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு வருகிற பிப்ரவரி 4ம் தேதி நடக்கிறது. இதனால் விரைவில் 2800 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதேபோல ஒவ்வொரு பிரிவிலும் உள்ள பிரச்னைகளை களைந்து தீர்வுகளை ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News