Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆண்டு முழுவதும் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் வகையில், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மிக் ஜாம் புயல், மழையால் சேதமடைந்த அரசு பள்ளிகளை சீரமைக்கும் வகையில், ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தின் கீழ், சிறப்பு தூய்மை பணி நேற்று தமிழகம் முழுவதும் தொடங்கியது.
ஜன. 10-ம் தேதி வரை நடைபெற உள்ள இப்பணியை மாநில அளவில், நேற்று திருவள்ளூர் மாவட்டம்- பூந்தமல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: தமிழகத்தில் இயற்கை சீற்றங்களான புயல், மழை காரணமாக பள்ளி வளாகங்கள் சேதமடைந்தன. அதனை சீர்செய்யும் வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தின் கீழ், 3 நாட்கள் சிறப்பு பள்ளி தூய்மை பணி செயல்பாடுகள் நடைபெற உள்ளன.
இந்த பணியில், ஆண்டு முழுவதும் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் வகையில், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும், பள்ளி வளாகம் தூய்மை பணிக்காக, தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழு, மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் ஒரு குழு, பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம் அடங்கிய குழு என 3 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த குழுக்கள் மூலம் பள்ளி வளாகத்தில் உள்ள புதர்கள் மற்றும் களைச் செடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல், பள்ளி வகுப்பறைகளின் கதவுகள், ஜன்னல்கள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்தல், காலை, மதிய உணவு திட்டங்களுக்கான சமையல் அறை, உணவருந்தும் இடத்தை தூய்மையாகப் பராமரித்தல், பள்ளி வளாகத்தில் நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் குமரகுருபரன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் முகமது அப்துல்லா, பூந்தமல்லி மற்றும் ஆவடி எம்எல்ஏக்கள் கிருஷ்ணசாமி, நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment