Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, January 2, 2024

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த ஆசிரியர்கள்!

தொடக்கக்கல்வித் துறையில் சார்நிலைப் பணிகளின் சிறப்பு விதிகளில் ஒன்பதாம் விதிகளில், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியமும் ஒர் அலகு என உள்ளதனை மாவட்ட முன்னுரிமை அல்லது மாநில முன்னுரிமை என மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்து உரிய பரிந்துரையினை அரசுக்கு அளிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநரைத் தலைவராகவும், உறுப்பினர்களாக தொடக்கக்கல்வித்துறை இயக்குநர், பள்ளிக்கல்வித்துறை பணியாளர் தொகுதி இணை இயக்குநர் நியமனம் செய்யப்பட்டனர்.

பள்ளிக் கல்வித் துறையில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் State Seniority என்ற நடைமுறை பின்பற்றி பதவி உயர்வு வழங்கப்படுகிறது. தொடக்கக் கல்வி நிருவாகத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் முன்னுரிமை (Seniority) இது நாள் வரை ஒன்றியளவில் கடைபிடிக்கப்பட்டது. இதனால் பதவி உயர்வு அந்த ஒன்றியளவில் மட்டுமே வழங்ககூடிய நிலையில் இருந்தது.

இதனால் மூத்த ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறாமல் பாதிக்கப்பட்டு வந்தனர்.இந்த நிலையில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில், அவர்களுக்கும் இனி வரும் காலங்களில் மாநில முன்னுரிமை (State Seniority) அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அதன்படி, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட்டிருந்த அரசாணையில், “தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணி வரன்முறை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநில அளவிலான பணி விதிமுறைகள் 2023 டிசம்பர் 31ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படும். ஒன்றிய அளவில் பணியாற்றும் தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு இனிமேல் மாநில அளவிலான முன்னுரிமை பின்பற்றப்படும்.

பணி நியமனம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் செய்யவும், மாநில அளவில் முன்னுரிமை பின்பற்றப்படும்” என அதில் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள நன்றி கடிதத்தில், “தமிழ்நாடு தொடக்ககல்வி சார்நிலைப்பணி விதிகள் 1983 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இவ்விதிகள் அன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்டது.விதிகள் உருவாக்கப் பட்டு 40 ஆண்டுகள் கடந்ததால், இந்த விதிகள் காலத்திற்கு எவ்வகையிலும் பொருந்தவில்லை. இந்த அரசாணைகளை பின்பற்றுவதால் ஆயிரக்கணக்கான நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன மேலும் இளையோர் முதியோர் ஊதிய முரண்பாடு தொடர்பாக தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருவதால், ஊதிய நிர்ணயத்தில் அரசுக்கு பெறும் நிதி இழப்பு ஏற்படுகிறது.

மாநில அளவில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை ஆசிரியர்களைப் போல மாநில அளவில் முன்னுரிமை, இளையோர், மூத்தோர் ஊதிய முரண்பாடு நீக்கம், நேரடி நியமன பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு முரண்பாடு நீக்கம் என்ற முக்கனிகள் இந்த ஒரே அரசாணையில் தமிழக அரசு வழங்கியிருக்கிறது.

1981 ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய ஆணையர்களால் நியமிக்கப்பட்ட ஆசிரியர் யாரும் தற்போது பணியில் இல்லை.இந்த நடைமுறை முற்றிலும் காலப்போக்கில் மாற்றப்பட்டு இடைநிலை ஆசிரியர்கள் முதலில் மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையிலும் பிறகு மாநில அளவிலான முன்னுரிமை அடிப்படையிலும் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்படும் முறை ஏற்பட்டது.

1995 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக போட்டி தேர்வுகள் மூலம் தொடக்க கல்வி மற்றும் பள்ளி கல்வித்துறையில் ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள்.காலப்போக்கில் இந்த நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு 2004 ஆம் ஆண்டிலும் போட்டி தேர்வு மூலம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்கக்கல்வித்துறையில் நியமனம் செய்யப்பட்டனர்.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஆசிரியர் நியமனத்திற்கு மாநில அளவிலான ஆசிரியர் தகுதி தேர்வு நடைமுறைப் படுத்தப்பட்டு அதன் மூலமாகவே பணி நியமனங்கள் நடைபெற்று வருகின்றன.தற்போது தொடக்கக் கல்வித் துறையில் எந்த நிலையிலும் ஊராட்சி ஒன்றிய அளவில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறுவது இல்லை.

தற்போதைய நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்று உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் வலியுறுத்தியதன் அடிப்படையில் தொடக்க கல்வியில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் அனைத்தும் மாநில அளவிலான போட்டித் தேர்வு அடிப்படையில் தான் நடைபெறுகிறது.

இந்த நிலையில், தொடக்கக் கல்வித் துறையில் 1981 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஒன்றிய அளவிலான முன்னுரிமை என்பது காலத்திற்கு எவ்வகையிலும் பொருத்தாது ஆகும். தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் ஏறத்தாழ 22 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 6 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன.

இவற்றில் 80 ஆயிரம் இடைநிலை ஆசியர்களும், 32 ஆயிரம் தொடக்கப்பள்ளித் தலைமைஆசிரியர்களும், 18,000 பட்டதாரி ஆசிரியர்களும். 6 ஆயிரம் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் பணிபுரியலாம் அல்லது பணிபுரிந்து வருகின்றனர்.

80 ஆயிரம் இடைநிலைஆசிரியர்களில் 32 ஆயிரம் நபர்களுக்கு மட்டும்தான் தொடக்கப்பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வு கிடைக்கும். மீதமுள்ளவர்களுக்கு படிப்படிப்படியாகத்தான் பதவி உயர்வு கிடைக்கும். அதேபோல் 32 ஆயிரம் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களில் முன்னுரிமை அடிப்படையில் முதல் 18 ஆயிரம் நபர்களுக்கு மட்டும்தான் பட்டதாரிஆசிரியர் பதவி உயர்வு கிடைக்கும்.

18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களில் 6 ஆயிரம் நபர்களுக்கு மட்டும்தான் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கிடைக்கும்.இதன்மூலம் அனைத்து ஆசிரியர்களுக்கும் குறந்தபட்சம் ஒரு பதவி உயர்வுவாவது கிடைக்கும். மிகவும் இளையோர் எனில் அனைத்து நிலை பதவி உயர்வுமே கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இந்த பதவி உயர்வுகள் மாநில அளவிலான முன்னுரிமைப்படி வழங்கப்பட உள்ளது.

இது தொடக்கக்கல்வித் துறையில் மட்டுமல்ல பள்ளிக்கல்வித்துறையில் நடைமுறைவில்தான் இருக்கின்றது.நீதிமன்றத்தீர்ப்பு தீர்ப்பின் அடிப்படையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு இதன் சாதாங்கள், பணியாளர் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பழைய முறைகளில் இருக்கும் குறைபாடுகளையும் சமத்துவமில்லா நடைமுறையையும் களையவே அனைவருக்குமான சமமான பரந்துபட்ட வாய்ப்பாக இதை இப்போது நடைமுறைப்படுத்தி உள்ளனர்.

முன்னுரிமை என்பது ஒன்றிய அலகாக இருக்கும் போது ஒரே நாளில் வெவ்வேறு ஒன்றியங்களில் பணி நியமனம் பெறும் நிலையில் அந்தந்த ஒன்றிய நிலைமைக்கேற்ப பதவி உயர்வு பெறுகின்றனர். எடுத்துக்காட்டாக 2004ல் பணி நியமனம் பெற்றவர்கள் ஒருசில ஒன்றியங்களில் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரை பெற்றுவிட்டனர்.

இதே நாளில் பணியேற்ற பெரும்பாலானவர்களுக்கு முதல் நிலை பதவி உயர்வு கூட இன்னும் கிடைக்கவில்லை.1988 இல் பணிநியமனம் பெற்ற பலர் ஒரு பதவி உயர்வு பெற்ற நிலையிலேயே பணிபுரிந்து வருவது சரியான நடைமுறை இல்லை.

இதைத்தான் மாற்றி மாநில அளவில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்பட்டு மாநில அளவில் காலிப்பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாய்ப்புகள் ஒன்றிய அளவில் மட்டும் சுருங்கி விடாமல் பரவலாக்கப்பட்டுள்ளது.

ஏற்றத்தாழ்வுகள் அகற்றப்பட்டு நியமனநாள் படி காலிப்பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் மிகச்சரியான மாற்றம் முன்கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பதவி உயர்வு வாய்ப்பு வரவேற்கப்பட்டு இருக்கிறது. சீராக தொடக்கக் கல்வித் துறையில் குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிக பதவி உதவி வாய்ப்பு, நேரடி நியமனம் பெற்றவர்களுக்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் நிலையில், மிகப்பெரும் மாற்றத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.

தொடக்கக்கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் நான்கு பதவி உயர்வுகள் பெரும் வகையிலும், பட்டதாரி ஆசிரியர் குறைந்தபட்சம் இரண்டு பதவி உயர்வுகள் பெரும் வகையில் அனைத்து பதவி உயர்வுகளும் முறைப்படுத்தப்பட்டுள்ளன. மாநில முன்னுரிமை ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறையில் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பதவி உயர்வு சீராக கிடைக்கும்.

இதுவரை தொடக்கப்பள்ளி ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தான் பணியாற்றும் ஒன்றியத்தை விட்டு வேறு ஒன்றியத்துக்கு செல்ல முடியாத நிலை இருந்தது.

தற்போது அவர் தலைமை ஆசிரியராகவே மாநிலம் முழுவதும் எந்த ஒன்றியத்திற்ரும் செல்ல முடியும். தென் மாவட்ட ஆசிரியர்கள் பதவி உயர்வுக்காக வெளி மாவட்டங்களில் காத்திருந்த நிலையில் மாற்றம் ஏற்படும் பதவி உயர்வு வாய்ப்புள்ள தகுதியான அனைவருக்கும் ஒரே சீராக பதவி உயர்வு வாய்ப்புகள் கிடைக்கும்.

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறாமல் நேரடியாக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறும் சமூக அநீதி, வரலாற்று பிழை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்த ஆசிரியர்களை அரசு ஊழியர்களாக மாற்றி, ஆணை வழங்கப்பட்ட உடனேயே, இன்று நடைமுறைப்படுத்தப்பட்ட மாநில அளவிலான முன்னுரிமை என்பதை நடைமுறைப்படுத்தி இருந்தால் முன்னுரிமைகளில் வேறுபாடுகளையும், ஊதியங்களில் வேறுபாடுகளையும் களைந்திருக்கலாம்.

தொடக்கக்கல்வித்துறையில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு சரியாக மாற்றம் நிகழ்த்தப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். பள்ளிக் கல்வித் துறையில் இதுவரை நிறைவேற்றப்பட்ட அரசாணைகளில் சமூக நீதியும், சமத்துவமும் கொண்ட திராவிட மாடல் அரசின் இந்த வரலாறு போற்றும் அரசாணையை வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறோம்.

இந்த அரசாணையைப் புத்தாண்டு பரிசாகத் தந்த முதலமைச்சருக்கும், அவர் வழியில் ஆசிரியர் நலன் காக்கும் பள்ளிகல்வித்துறை அமைச்சருக்கும், பட்டதாரி ஆசிரியர்களின் இதயம் நிறைந்த நன்றி” எனத் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News