Join THAMIZHKADAL WhatsApp Groups
பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு மனம்திறந்த மடல்!
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு,
முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர், இனமானப் பேராசிரியர் இவர்களின் அன்புநிழலில் வளர்ந்தவன் என்ற அடையாள முகவரியினைப் பெற்றவன். ஏன் ? உங்களின் தாத்தா - நாடறிந்த அஞ்சாநெஞ்சர். மக்களால் அன்பிலார் என்று போற்றி மதிக்கக்கூடியவர் - அவர்களை 1965-66ல் - நான் பயின்ற ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் அழைத்து சென்று நிகழ்ச்சி நடத்தியவன் என்ற நினைவலைகள் நெஞ்சத்தில் நிறைந்துள்ளது - என்ற உரிமை உறவுடன் வெளிப்படைத் தன்மையுடன் மனம் திறந்த மடலினை தங்களுக்கு எழுதுகிறேன்.
தினகரன் அறிக்கை இந்திய அரசின் வரலாற்றில் முதன்முறையாக பெற்றோர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 7 மண்டலங்களில் 7 கட்டமாக நடக்கிறது.
கூட்டத்தின் நோக்கத்தினை வெளிப்படைத் தன்மையுடன் பகிர்ந்து கொள்ளலாமே!
முதற்கட்ட நிகழ்ச்சியில் சனவரி 29-ல் மதுரையில் நடைபெறும், திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தேனீ, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ஒரு பள்ளிக்கு 4 பெற்றோர்கள், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் என 30 ஆயிரம் பேர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, செயலாக்கத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார்.
மாண்புமிகு அமைச்சர்கள் திரு.பி.டி.பழனிவேல்ராஜன் அவர்களும், மாண்புமிகு மூர்த்தி அவர்களும், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், அனைத்து இயக்குநர்களும் பங்கேற்கிறார்கள்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் விழாவிற்கு தலைமை வகித்து நடத்துகிறார்.
கூட்டத்தின் நோக்கம் :
“அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் பெற்றோர்களுக்கு தெரிந்துள்ளதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் பெற்றோர்களுக்கு அதனை தெரியப்படுத்த உள்ளனர்.”
வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
30 ஆயிரம் பேருக்கு உணவு மற்றும் பயணச் செலவினை ஏற்றுக்கொள்வது யார் ?
அழைத்து வருபவர்கள் – ஆசிரியர்கள்.
ஆசிரியர்கள் வேண்டுமானால் அவர்கள் சொந்த செலவில் வருவார்கள். பெற்றோர்களுக்கு பயணச் செலவு?
இரண்டு நாள் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஈடுகட்டுவது யார்?
கூட்டத்தின் நோக்கமென்ன?
எதிரொலித்துவரும் கருத்துச் சிதறல்கள்.
பள்ளிகள்தோறும் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆசிரியர்கள் மீது நம்பிக்கையில்லையா?
மாண்புமிகு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கழக இளைஞர் அணி மாநில மாநாட்டினை நாடே வியக்கும்வண்ணம் சேலத்தில் சனவரி 21-ல் தலைமை வகித்து நடத்திக் காட்டியுள்ளார்.
இணையாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் - 7 மண்டலங்களில் பெற்றோர்களை அழைத்து பெற்றோர்கள் மாநாட்டினை நடத்திக்காட்டிட திட்டமிடுகிறார். மண்டலத்திலுள்ள மாண்புமிகு அமைச்சர்கள் இவர் தலைமையில் கலந்து கொண்டு பெருமையினைத் தேடி தரவேண்டும்.
மண்டல ஆய்வுக் கூட்டத்தினை நடத்திய அனுபவத்தினை மீண்டும் நினைவுபடுத்தி செயல்பட வேண்டுகிறோம்.
ஆசிரியர்கள் கோரிக்கைகளை எதையும் செய்ய முன்வராத பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு – கூட்டத்தை அழைத்து வருபவர்கள் ஆசிரியர்களாம்! கூட்டத்தை சேர்த்து தருபவர்கள் ஆசிரியர்களா?
ஆசிரியர்கள் மீது நம்பிக்கை இழந்து – ஆசிரியர் சங்கங்களை அலட்சியப்படுத்திக்கொண்டு – ஆசிரியர் மனசு திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் என்ற புது பதவியினை உருவாக்கி திருச்சி மாநகரில் அலுவலகம் தந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் செயல்பட்டுவரத் தொடங்கியதற்குப் பிறகு அமைச்சர் மீதுள்ள நம்பிக்கை உணர்வினை ஆசிரியர் சங்கங்கள் இழந்துவிட்டார்கள். 60 ஆண்டுகாலம் ஒன்றிய அளவில் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறையினை மாற்றி மாநில அளவில் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் முன்னுரிமையினை மாற்றியமைத்து அரசாணை எண். 243, 21.12.2023ல் பிறப்பிக்கப்பட்டதன் அவசரம்தான் என்ன?
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அழுத்தத்தால்தான் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியுமா? கருத்து கேட்கும் குழுவினை அமைத்த பள்ளிக்கல்வித்துறை தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களை அழைத்து கருத்து கேட்காதது ஏன் ?
தலைவர் கலைஞர் அவர்கள் 80 விழுக்காடு பெண் ஆசிரியைகளை - தொடக்கக்கல்வியில் நியமனம் செய்தார்கள். 10 விழுக்காட்டினர் நன்மை அடைவதற்காக 90 விழுக்காடு பெண் ஆசிரியர்கள் – மூத்த ஆசிரியர்களை பெருத்த பாதிப்புக்கு ஆளாக்கப்படுவதேன்?
60 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக நேரடி நியமனம் செய்யப்படும் வாய்ப்பு பறிக்கப்பட்டு இருப்பது ஏன் ?
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்களிடம் 12.10.2023 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 12 கோரிக்கைகளுக்கு அரசாணை பிறப்பிப்பதாக ஒப்புதல் அளிக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்றுகூட அரசாணையாக வெளிவரவில்லை.
27.01.2024 அன்று மாவட்டத் தலைநகர்களில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்துகிறார்கள்.
சுய விளம்பரத்திற்காக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவியினை பயன்படுத்துவதிலிருந்து ஒருநாள் ஒதுக்கி ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீது கவனம் செலுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வாருங்கள். பதவிக்கு பெருமையினை சேர்க்கும்.
நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான ஆசிரியர்களின் வாக்குகள் - குடும்பத்தாரின் வாக்குகள் பற்றி கவலைப்படாத அமைச்சராக செயல்பட்டு வருவதை மறுபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள முன்வாருங்கள்.
பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முனைப்புகாட்ட முன்வருவதற்கு அலட்சியம் காட்டினால் பெற்றோர்களை
கொண்டாடும் மண்டலக் கூட்டங்கள் எதிர்க்கட்சிகளின் அழுத்தமான விமர்சனத்திற்கு உள்ளாக நேரிடும் என்பதையும் சிந்தித்து செயல்பட முன்வருவது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவிக்கு இழந்த நம்பிக்கையினை கொண்டுவந்து சேர்க்கும்.
ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து களத்தில் இறங்கி போராடி வருகிற காலம் தாங்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக உள்ள காலத்தில்தான் என்பதை மறுக்க முடியுமா?
நம்பிக்கை இழந்துவரும் வாக்கு வங்கியினை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திட சிந்தனை செய் மனமே!
நெஞ்சுக்கு நீதியினை எங்களுக்கு தந்து சென்ற தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் நிம்மதி இழந்து நிற்கும் ஆசிரியர்கள்.
வா. அண்ணாமலை,
ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர்
தமிழக ஆசிரியர் கூட்டணி
“ஆர்வலர் மாளிகை” 52,
நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி,
சென்னை-600005. செல்: 9444212060
மின்னஞ்சல் : taktaktak2014@gmail.com
No comments:
Post a Comment