அரசுப்பள்ளிகளில், நடுநிலைப்பிரிவில் அறிவியல் பாடத்திற்கென தனித்தனி ஆசிரியர்கள் இல்லாதது தான், நீட், ஜே.இ.இ., போன்ற போட்டி தேர்வுகளில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு குறைவதற்கான காரணம்' என, பணியிடை பயிற்சியில் உணரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அறிவியல் தொழிற்நுட்ப மன்றம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு மாவட்ட வாரியாக, 6 முதல், 8ம் வகுப்பு வரை பணியாற்றும் அரசுப்பள்ளி அறிவியல் ஆசிரியர்களில், 50 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, அரசு கல்லுாரிகளில், ஐந்து நாள் பணியிடை பயிற்சி வழங்கப்பட்டது.
அறிவியல் பாடத்தில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் என, ஒவ்வொரு பாடப்பிரிவிலும் புலமை பெற்ற பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் வாயிலாக பயிற்சி வழங்கப்பட்டது. நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பயிற்றுவிப்பது எப்படி, அறிவியல் பாடத்தில் மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்துவது எப்படி என்பது குறித்து ஆலோசனை மற்றும் ஆய்வகங்களில் செய்முறை பயிற்சியும் வழங்கப்பட்டது.
சமச்சீர் பாடம் 'சபாஷ்'
பயிற்சி வழங்கிய அறிவியல் பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது:
அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர்கள், அறிவாற்றலில் மேம்பட்டவர்களாக உள்ளனர்; பாடம் சார்ந்து, நிறைய கேள்விகளை கேட்கின்றனர். இப்பயிற்சி வழங்கியதன் வாயிலாக, தற்போதை தமிழக அரசின் சமச்சீர் பாட புத்தகங்களை புரட்டி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு இணையாக, சிறந்த முறையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அரசுப்பள்ளிகளை பொறுத்தவரை, 6 முதல், 8ம் வகுப்பு வரை, அறிவியல் பாடத்துக்கென ஒரு ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர்.
அந்த ஆசிரியர் அறிவியல் பாடத்தில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என, ஏதாவது ஒரு பாடப்பிரிவில் மட்டும் தான், புலமை பெற்றவராக இருப்பார்; அந்த பாடம் சார்ந்து தான், தனது முதுகலை படிப்பையும் படித்திருப்பார்.
ஆனால், பள்ளி அளவில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் என அனைத்து பாடங்களையும் அவரே கற்றுத்தர வேண்டியுள்ளதால், தான் சார்ந்திராத பாடப்பிரிவில் அவரால் முழு ஈடுபாடு காண்பித்து, பாடம் பயிற்றுவிக்க முடிவதில்லை என்பதை, இப்பயிற்சி வாயிலாக உணர முடிந்தது.
குறையும் ஈடுபாடு
ஆசிரியர்களால் முழு ஈடுபாடு காட்டப்படாத பாடப்பிரிவின் மீது, மாணவர்களுக்கும் ஆர்வம் குறைகிறது; இதனால் தான், அவர்கள் மேல்நிலை வகுப்பில் அறிவியல் சார்ந்த சில பாடப்பிரிவில், ஆர்வம் இல்லாதவர்களாக உள்ளனர்; இது, கல்லுாரி அளவிலும் எதிரொலிக்கிறது. இதன் விளைவு தான், நீட், ஜே.இ.இ., போன்ற போட்டித் தேர்வுகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்பு பறிபோகிறது என்பதையும், இப்பணியிடை பயிற்சி உணர்த்தியது.
எனவே, அரசுப்பள்ளிகளில் நடுநிலைப்பள்ளிகள் அளவிலேயே அறிவியல் பாடத்திற்கென தனித்தனி ஆசிரியர்களை நியமித்து, அவர்கள் வாயிலாக பாடம் பயிற்றுவிக்கும் போது, மாணவர்களின் கற்கும் ஆவலும், பாடம் சார்ந்த அறிவாற்றலும் அதிகரிக்கும் என்பதே, கல்வித்துறைக்கு எங்களின் யோசனை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment