Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்தியாவில் முதன்முறையாக அனைத்து பள்ளி மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேரடியாக சந்தித்து பேசும் ‘பெற்றோரை கொண்டாடுவோம்’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மொத்தம் 7 கட்டமாக நடைபெற உள்ள நிகழ்ச்சியை வரும் 29ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு பள்ளிகள் என்றாலே ஏதோ மரத்தடியில் இயங்கும், கல்வித்தரமும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்ற மாயைகள் இப்போது உடைபட தொடங்கியுள்ளன.
அதேபோல், பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், காலை உணவு திட்டம், அரசுப்பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வியில் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையில் மாற்றத்தை உருவாக்கி வருகின்றன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வகுப்பறைகள், கல்வி உபகரணங்கள், கழிப்பிடம், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளிலும் தமிழ்நாடு அரசு இப்போது தனி அக்கறை காட்டி வருகிறது.
அதேபோல், கொரோனா பேரிடர் காலத்தில் ஏற்பட்ட இடைநிற்றலை சரிசெய்ய முன்னெடுக்கப்பட்ட இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், பள்ளி மேலாண்மைக் குழுக்கள், பள்ளி செல்லாப் பிள்ளைகளைக் கண்டறிய செயலி, சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி, 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் இயக்கம், பயிற்சித் தாள்களுடன் கூடிய பயிற்சிப் புத்தகங்கள், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள்,
மாணவர் மனசு என்ற ஆலோசனைப் பெட்டி, கணித ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி, உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், வகுப்பறை உற்று நோக்கு செயலி மற்றும் மின் ஆசிரியர் என்ற உயர்தர டிஜிட்டல் செயலி ஆகிய பல்வேறு திட்டங்களை பள்ளிக்கல்வித் துறை சிறப்பாக செய்து வருகிறது. தற்போது, அவற்றில் ஒருபகுதியாக, ‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ என்ற நிகழ்ச்சியை பள்ளிக் கல்வித்துறை நடத்த இருக்கிறது. பெற்றோர்களுக்கு விழிப் புணர்வு: பெற்றோர்களை கொண்டாடுவோம் என்ற இந்த நிகழ்ச்சி மொத்தம் 7 கட்டமாக நடைபெற உள்ளது.
முதற்கட்டமாக, வருகிற 29ம் தேதி மதுரையில் தமிழ்நாடு இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செயலர் குமரகுருபரன் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், தனியார் பள்ளி இயக்குநர் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
மதுரையில் தொடங்கும் இந்த முதற்கட்ட நிகழ்ச்சியில், தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ஒரு பள்ளிக்கு 4 பெற்றோர்கள், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் என 30 ஆயிரம் பேர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பல ஆலோசனைகளை மேற்கொண்டு இருக்கிறார். அதில் பள்ளிகளை மேம்படுத்துதல், மாணவர்களின் கற்றல் திறனை மேலும் அதிகரிப்பது என பல்வேறு கருத்துகள் கேட்டறியப்பட்டு இருக்கிறது.
ஆனால், பள்ளி மாணவர்களின் பெற்றோர்களை அமைச்சர் நேரில் சந்தித்து, அவர்களின் மனநிலையை கேட்டு அறிவது என்பது இதுவரை நடக்காத ஒன்று. ஏனென்றால், பெற்றோர்கள் தான் மாணவர்களின் முதல் ஆசிரியர், மாணவர்களின் மனநிலையை எளிதில் புரிந்துகொள்பவர்கள் அவர்கள் மட்டுமே. அதற்காகத்தான் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை கையில் எடுத்துள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன.
ஆனால் அவை அனைத்தும் பெற்றோர்களுக்கு தெரிந்துள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் பெற்றோர்களுக்கு அதனை தெரியப்படுத்த உள்ளனர்.
மேலும், பெற்றோர்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்திக்கும் ஒரு வாய்ப்பினை பெறுவர். எனவே அரசுப்பள்ளியில் படிக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு இருக்கும் பிரச்னைகள் என்ன, வகுப்பறையில் உள்ள தேவைகள் என்ன என்பவை குறித்து நேரடியாக தெரிவிக்கும் ஒரு வாய்ப்பினை பெறுவர். கடந்த ஆண்டை பொறுத்தவரை அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றை மேலும் அதிகரிக்க இந்த நிகழ்ச்சி உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment