Join THAMIZHKADAL WhatsApp Groups
தேசியக்கொடி
முன்னுரை
ஒரு நாட்டின் தனித்த அடையாளம் என்பது அதன் தேசியக்கொடியே ஆகும். ஒரு நாட்டின் தேசியக்கொடிக்கு காட்டும் மரியாதை அந்த தேசத்திற்கே காட்டுவதாகும். தமிழகத்தில் ஆட்சி செய்த மூவேந்தர்களும் தங்களுக்கென்று தனிப்பட்ட கொடிகளை கொண்டு ஆட்சி செய்தனர்.
கொடியின் அமைப்பு:-
நம் தேசத்தின் விடுதலைக்குப் பிறகு மக்களாட்சியை உணர்த்தும்படி நிகழ்த்துவது நமது தேசியக்கொடி ஆகும். நம் தேசியக்கொடி மூன்று பங்கு நீளமும், இரண்டு பங்கு அகலமும் உடையது. மூன்று வண்ணங்கள் உள்ளன. ஒவ்வொரு வண்ணமும் நீண்ட செவ்வகப்பட்டையாக உள்ளன. மேல் புறம் காவி நிறமும், மத்தியில் வெள்ளை நிறமும், கீழ்ப்பாகம் பச்சை நிறமும் கொண்டது. வெள்ளை நிறத்தின் மத்தியில் நீலநில நீலநிற அசோக சக்கரம் உள்ளது.
வண்ணங்கள் போதிப்பவை:-
காவி நிறம் தியாக மனப்பான்மையின் அடையாளமாகும். தாய்நாட்டிற்காகத் தியாக மனப்பான்மையுடன் விளங்க வேண்டும் என்பதை அது உணர்த்துகிறது.
வெள்ளை நிறம் தூய்மையை குறிப்பதாகும். உடலளவில் மட்டுமின்றி மனதளவிலும் நாம் தூய்மையையும் ஒழுக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்பதை அது உணர்த்துகிறது.
பச்சை நிறம் பசுமையை குறிப்பது. நாட்டின் வளமையைக் காக்க வேண்டியது நம் கடமை என்பதை அது உணர்த்துகிறது.
அசோகச் சக்கரத்தில் 24 ஆரங்கள் உள்ளன. அவை தர்மங்களை உணர்த்துபவையாகும்.
கொடியேற்றுதலுக்கான விதிகள்:-
தேசியக்கொடியை அரசு அலுவலகங்களிலும், பள்ளிக்கூடங்களிலும், நம் வீடுகளிலும் கூட ஏற்றலாம். அதற்கென சில விதிமுறைகள் உள்ளன.
சுதந்திர தினம், குடியரசு தினங்களில் பொதுவான இடங்களில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்ய வேண்டும். சூரிய உதயத்திற்கு பின் ஏற்றி சூரிய அஸ்தமனத்திற்கு முன் இறக்கி விட வேண்டும். கொடியேற்றி பின் கொடி வணக்கம் செய்ய வேண்டும். பேரணிகளில் வலது தோளிற்கு மேல் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.
தேசிய அளவில் துக்கம் ஏற்பட்டால் மட்டும் தேசியக்கொடியானது அரைக்கம்பத்தில் பறக்க விடப்படுகின்றது. கொடியை தலைகீழாகப் பறக்க விடுதல் அதனை அவமதிப்பதாகும். அவ்வாறு பறக்க விடுதல் கூடாது. தேசியக் கொடியை மிதித்தல், கிழித்தல், மழையில் நனைய விடுதல், தரையில் போடுதல் கூடாது. அது நம் தாய்நாட்டை அவமதிக்கின்ற செயலாகும்.
முடிவுரை
நாம் இந்தியர்கள் என்ற அடையாளம் நமது தேசியக்கொடி ஆகும் . தேசியக்கொடியைக் காப்பது நம் மானத்தைக் காப்பது போன்றதாகும்.
சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் அனைவரும் நம் சட்டையில் தேசியக்கொடியை அணிந்து கொள்ள வேண்டும். மற்றைய நாட்களிலும் தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்த வேண்டும். தேசிய கொடியின் பெருமையை உணர்ந்து அதைப்போற்றி மரியாதை செய்வோமாக.
Thanks to Mrs A R Mahalakshmi
No comments:
Post a Comment