Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 24, 2024

இனி பள்ளியிலேயே இந்த சான்றிதழ்களும் கிடைக்கும்... அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசுப் பள்ளிகளில் ஆதார் பதிவு செய்யும் திட்டம் துவங்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கான சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பெற்றோரின் வருமானச் சான்றிதழ் ஆகியவையும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே ஆதார் பதிவு செய்யும் திட்டம் துவங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் முதல் முறையாக மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்யும் திட்டம், கோவை காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இத்திட்டத்தினை இன்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் இன்று இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி பள்ளி மாணவர்களுக்கான சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், அவர்களின் பெற்றோரின் வருமானச் சான்றிதழ் உள்ளிட்டவை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாத காலத்தில் அதற்கான வசதிகள் பள்ளிகளிலேயே ஏற்படுத்தித் தரப்படும்.

இன்று 4வது பெற்றோர் மாநாடு கோவையில் நடைபெற்று வருகிறது. திருப்பூர், நீலகிரி, ஈரோட்டில் சேர்ந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். இது போன்ற மாநாடுகளின் வாயிலாக முதலமைச்சர் கொண்டு வந்த திட்டங்கள் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதனால் அரசுப் பள்ளிகளுக்கு பெற்றோர்கள் தரப்பு நன்கொடை வழங்குவது அதிகரித்துள்ளது." என்றார்.

மேலும், "மதுரையைச் சேர்ந்த ஆயி பூரணம்மாள் அரசுப்பள்ளிக்கு சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாக கொடுத்துள்ளார். இதேபோல் பலரும் நிலங்களை நன்கொடையாக வழங்க முன் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த 4 மாவட்டங்களில் மட்டும் இதுவரை அரசு பள்ளிகளுக்கு ரூ.448 கோடி மதிப்பீட்டில் நிலங்கள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. இன்றும் பலபேர் ஒரு ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை நன்கொடையாக வழங்க பத்திரங்களை கொடுத்துச் சென்றுள்ளனர். அடுத்ததாக காஞ்சிபுரத்தில் 5வது பெற்றோர் மாநாடு நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஊக்கம் தருவதின் அடிப்படையில் மாநாடு சிறப்பாக நடத்த ஏற்பாடு நடக்கிறது." என்றார்.

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் வழங்கும் திட்டத்திற்காக எல்காட் மூலமாக 770 ஆதார் பதிவு மின்னணு கருவிகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதனால் அனைத்து பள்ளிகளிலும் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் வரை புதிதாக பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை பதிவு செய்யாத மாணவர்களும் இத்திட்டத்தை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News