Join THAMIZHKADAL WhatsApp Groups
புதிய நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படுகிறது. மக்களவை தேர்தல் நெருக்கத்தில் இடம்பெறும் பட்ஜெட் என்பதால் அது குறித்தான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நாளை(பிப்.19) மீண்டும் கூடுவதை அடுத்து, மாநில பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இது, நிதியமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, நாளை மறுநாள்(பிப்.20) வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய இருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டம் பிப்.12 அன்று தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கிய இந்த கூட்டம், எதிர்பார்த்தது போலவே சர்ச்சைக்கும் ஆளானது. தமிழக அரசு சார்பிலான உரையின் முதல் பத்தியை மட்டும் படித்த ஆளுநர், கூடுதலாக வாசித்தது பின்னர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. அரசின் தயாரிப்பிலான உரை மட்டுமே அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் பிப்.13 அன்று தொடங்கி இரு நாட்கள் நடைபெற்றது. பிப்.15 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இவ்வாறான அவை நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக தற்போது நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மார்ச்சில் நடைபெறுவதாக இருந்த தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல், மக்களவை தேர்தல் அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருப்பதை முன்னிட்டு, முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துவிட்டால், தேர்தல் நடத்தை விதிகள் அமலாவதன் கீழ் மக்களுக்கான நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட இயலாது. மக்களவை தேர்தல் தேதிக்கான அறிவிப்பை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிடும் எனத் தெரிகிறது. எனவே மாநில அரசுகள் முன்கூட்டியே பட்ஜெட் தாக்கலை மேற்கொள்வதன் வரிசையில் தமிழ் நாடு அரசு நாளை தாக்கல் செய்ய உள்ளது.
பொது மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல்களைத் தொடர்ந்து, 2 பட்ஜெட்கள் மீதான விவாதங்கள் நடைபெறும். பிப்.21 வரையிலான இந்த விவாதங்களை அடுத்து பிப்.22 அன்று நிதி மற்றும் வேளாண் துறை அமைச்சர்கள் விவாதத்துக்கு பதில் அளிக்க உள்ளனர். இதனிடையே மக்களவை தேர்தல் நெருக்கத்தில் தாக்கலாகும் பட்ஜெட் என்பதால், மக்களை கவரக்கூடிய வகையிலான அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் பரவலாக காணப்படுகிறது.
No comments:
Post a Comment