Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசு பள்ளிகளில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
(Benifits of studying in TN govt. schools)
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி மற்றும் பொருட்கள், வேலைவாய்ப்பில் முன்னுரிமை, மருத்துவம் படிக்க 7.5 சதவீத ஒதுக்கீடு போன்ற சலுகை இருப்பதால் பெற்றோர்கள் அரசு பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கிடைக்கும் நன்மைகள்!
1. அரசு மருத்துவ கல்லூரிகளில் ஒதுக்கீடு
2. தொழில்முறை படிப்புகளில் ஒதுக்கீடு
3. உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதந்தோரும் ஊக்கத்தொகை
4. வழக்கமான சலுகைகள்/விலையில்லா பொருட்கள்
5. தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீதம் முன்னுரிமை
இந்த சலுகைகளை விரிவாக பார்ப்போம்:
1. அரசு மருத்துவ கல்லூரிகளில் இட ஒதுக்கீடு
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான தகுதித் தேர்வு - நீட் - கட்டாயமாக்கப்பட்டுவிட்ட நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து 2020 ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் ஒன்றை இயற்றியது.
அதன்படி, 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிக்கூடங்களில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ் ஆகிய படிப்புகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும். தமிழக அரசு பின்பற்றிவரும் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்குள், ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் இது செயல்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.
பஞ்சாயத்து பள்ளிகள், ஆரம்ப, நடுநிலை, மேல்நிலை பள்ளிகள், முனிசிபல், மாநகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிக்கூடங்கள் அரசுப் பள்ளிக்கூடங்களாகக் கருதப்படும்.
பின்தங்கியவர்களாக இருந்து, கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழே தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்புவரை படித்தவர்களும் அரசுப் பள்ளியில் படித்தவர்களாகக் கருதப்படுவார்கள்.
இந்த இட ஒதுக்கீடு, அரசு மருத்துவக் கல்லூரிகள் தவிர, சுயநிதிக் கல்லூரிகளில் அரசுப் பிரிவுக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கும் பொருந்தும். இந்த இட ஒதுக்கீடு தவிர, பொதுவான இடங்களுக்கும் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் போட்டியிடலாம் என்றும் இந்த சட்டம் தெரிவிக்கிறது.
7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டுனால், 700-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தகுதி:
🔹 அரசுப்பள்ளி மாணவராக, 6-12 வரை படிப்பு அல்லது RTE முறையில் 8-12 தனியார் பள்ளியில் படிப்பு.
(அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்றவர்களுக்கு ஒதுக்கீடு இல்லை)
🔹12ஆம் வகுப்பில் Physics, Chemistry மற்றும் Biology/Botany/Zoology/Biotechnology பாடங்களில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி
🔹 நீட் தேர்வில் தேர்ச்சி (145-300 மதிப்பெண் எடுத்தால் கூட போதும்)
🔹 அரசுப்பள்ளியில் படித்தற்கான சான்றிதழுடன், மருத்துவ சேர்க்கை/கலந்தாய்வுக்கு விண்ணப்பம்
2. அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தொழில்முறை படிப்புகளில் (Professional courses) ஒதுக்கீடு
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி 2020 ஆண்டு தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதனால் சுமார் 400 மாணவர்கள் வரை பயனடைந்தனர்.
இதேபோல பொறியியல், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து, தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அளவை ஆய்வுசெய்து பரிந்துரை வழங்குவற்காக ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஓர் குழுவை தமிழக அரசு கடந்த 2021, ஜூன் 15-ம் தேதி அமைத்தது.
இந்தக் குழு சமர்பித்த அறிக்கையில், தொழில்நுட்பப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதத்துக்கு குறையாமல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. அதன் அடிப்படையில் பொறியியல், வேளாண்மை, சட்டம், கால்நடை மற்றும் மீன்வளம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா, 2021, ஜூன் 26-ம் தேதி தமிழகசட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட அனைத்து தரப்பினர்மத்தியிலும் வரவேற்பு கிடைத்தது.
இதுகுறித்து உயர்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2 முதல் 4 சதவீதம் வரையே இருந்தது. இதை சரிசெய்யவே சிறப்பு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு அரசு ஒதுக்கீட்டில் 1.9 லட்சம் இடங்கள் வரை இறுதியாகும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் படிப்புகளில் சுமார் 14,250 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
1,253 இடங்கள்
குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக வளாக மற்றும் உறுப்புக் கல்லூரிகளில்மொத்தமுள்ள 8,840 இடங்களில் 663 இடங்களும் அரசுமற்றும் உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 7,860 இடங்களில் 590 இடங்களும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். கடந்த ஆண்டு அண்ணாபல்கலை.யில் 0.83 சதவீதமும், அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் 7.4 சதவீதமும் சேர்க்கை இருந்தது கவனிக்கத்தக்கது.
இதேபோல, கால்நடை மருத்துவப் படிப்புகளில் மொத்தமுள்ள 580 இடங்களில் 44 இடங்களும் வேளாண் இளநிலை படிப்புகளில் உள்ள 4 ஆயிரம் இடங்களில் 300 இடங்கள் வரையும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும்.
இதுதவிர இளநிலை மீன்வள பட்டப் படிப்புகளில் மொத்தமுள்ள 140-ல் 10 இடங்கள் ஒதுக்கப்படும்.
மேலும், சட்டப் படிப்புகளுக்கு அரசுஒதுக்கீட்டில் 1,651 இடங்கள் உள்ளன. அதில் 7.5 சதவீத ஒதுக்கீடு மூலம் 124 இடங்கள் வரை மாணவர்களுக்கு கிடைக்கும். அதன்படி, தொழிற்கல்வி படிப்புகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 15 ஆயிரம் இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்ந்து பயன்பெறுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
3. கல்லூரியில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை.
அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வகுப்பு வரை படித்த மாணவிகள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியை தொடர்ந்தால் அந்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்/ புதுமைப்பெண் திட்டம் என மாற்றிய அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பைத் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியான பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இந்த உதவித் தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், இந்த ரூ.1000 ஊக்கத்தொகை ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதி ஒவ்வொரு மாணவிகளின் வங்கி கணக்கிற்கும் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மாணவிகள் ஏதேனும் கல்வி உதவித்தொகை வாங்கி கொண்டிருந்தாலும் இந்த ரூ.1000 உதவித்தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்கிட ரூ. 698 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சென்ற வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
4. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர்களுக்கு வழங்கப்பெறும் நலத்திட்டங்கள்
1. சீருடை (1 முதல் 12 வரை)
2. இடை நிற்றலைக் குறைப்பதற்கான சிறப்பு ஊக்கத்தொகை
3. மடிக்கணினி (12 வகுப்பு)
4. காலணிகள் (1 முதல் 10)
5. புத்தகப்பை (1 முதல் 12 வரை)
6. கணித உபகரணப்பெட்டி்(6 முதல் 10 வரை)
7. வண்ணப் பென்சில்கள் (3 முதல் 5 வரை)
8. வண்ணக் கிரையான்கள் (1 முதல் 2 வரை)
9. நிலவரைபடநூல் (6 முதல் 10 வரை)
10. நோட்டுப்புத்தகங்கள் (1 முதல் 10 வரை)
11. பாடநூல்கள் (1 முதல் 12 வரை)
12. மிதிவண்டி (11)
13. பேருந்துப் பயண அட்டை (1 முதல் 12 வரை)
14. சத்துணவுத் திட்டம் (1 முதல் 8 வரை) + காலை சிற்றுண்டி
15. வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கானப நிதி உதவி (1 முதல் 12 வரை)
16. கம்பளிச் சட்டை (குளிர் நிறைந்த பகுதிகளில்)1 முதல் 8 வரை
17. சதுரங்க விளையாட்டு (2 முதல் 12 வரை)
5. அரசுப் பள்ளியில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீதம் முன்னுரிமை
10, 12-ம் வகுப்புகளில் தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசுப் பணியில் 20% இட ஒதுக்கீடு வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.
முன்பு தமிழ் வழியில் பட்டப்படிப்பைப் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பட்டப் படிப்பு மட்டுமின்றி 10, 12-ம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன், கல்லூரியில் தமிழ்வழியில் படித்ததாக சிலர் போலியான சான்றிதழ்களைச் சமர்ப்பித்து, இட ஒதுக்கீடு பெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடர்ந்து 6-ம் வகுப்பில் இருந்து தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் எனவும் 10, 12-ம் வகுப்புச் சான்றிதழ்களில் தமிழ்வழிக் கல்வியில் படித்திருப்பது குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதைக் கொண்டே டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, எம்ஆர்பி உள்ளிட்ட தமிழக அரசு நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சலுகை
இந்த ஆண்டு முதல், தமிழ்நாட்டில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆகவே உங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து அவர்களது கனவுகளை நினைவாக்குங்கள்!
No comments:
Post a Comment