Join THAMIZHKADAL WhatsApp Groups
ஐம்பது ஆண்டுக்கு முன்னர் சர்க்கரை நோய் ஊருக்கு ஒருவரிடம் தான் காணப்பட்டது. இருபது வருடங்களுக்கு முன்னர் கூட தெருவுக்கு ஒருவரைதான் பாதித்துக் கொண்டிருந்தது.
ஆனால், இன்றோ வீட்டிற்கு குறைந்தது ஒருவருக்காவது இருக்கிறது. இப்படி உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சர்க்கரை நோயானது வயது வரம்பின்றி பிறப்பு முதல் இறப்பு வரை எல்லோரையும் பாதிக்கிறது என்பது நாம் அறிந்த உண்மையே ஆனால் இது வயிற்றுக்குள் இருக்கும் சிசுவையும் மற்றும் பிறந்த பச்சிளம் குழந்தையையும் கூட பாதிக்கும் என்பது நம்மில் பல பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கர்ப்பக் காலத்தில் கர்ப்பிணிகளிடையே ஆரோக்கிய குறைபாடு என்பது பொதுவாகவே அனைத்து பெண்களுக்கும் உண்டாகிறது. கர்ப்பக் காலத்தில் சில நோய்கள் வந்து தொல்லை தந்தாலும் கர்ப்பகால நீரிழிவு என்பது சமீப வருடங்களாக அதிகரித்து வருகிறது.
கர்ப்பகால நீரிழிவு நோய்
கர்ப்பகால நீரிழிவு என்பது கர்ப்பகாலத்தில் அதிக ரத்த சர்க்கரை (குளுக்கோஸ்) அளவு உள்ள நிலை. பொதுவாக 100 கர்ப்பிணிகளில் 4 நபர்களுக்கு இது ஏற்பட்டாலும், அப்படி நோய் ஏற்பட்ட 95 நபர்களில் பிரசவத்திற்குப் பிறகு இந்நோய் தானாக நீங்குகிறது. சுமார் 5% பெண்களுக்கு, பிரசவத்திற்குப் பிறகும் இந்நோய் நீடிக்கிறது. ஒரு பெண்ணுக்கு கர்ப்பகால நீரிழிவு ஏற்பட்ட பிறகு, பிற்காலத்தில் மறுபடியும் நீரிழிவு நோய் உருவாகும் ஆபத்தும் அதிகமாக உள்ளது என்பதும் நம் மனதில் எப்போதும் வைத்துக் கொள்ள வேண்டும்.
சாதாரணமாக சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்து ரத்தத்தில் சர்க்கரை அளவானது 140 மி.கிராம் அளவில் இருக்க வேண்டும். அதைத் தாண்டினால் அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். இந்த அளவில் கர்ப்பிணிகளைப் பொறுத்தவரை 130 மி.கிராம் இருந்தாலும் ஹெச்பிஏ1சி அளவு 6%-க்கு அதிகமாக இருந்தாலும் அது கர்ப்ப கால சர்க்கரை நோய் என்கிறது மருத்துவ உலகம்.
யார் ஆபத்தில் உள்ளனர்
*உடல் பருமன் – கர்ப்பம் தரிப்பதற்கு முன்னர் பருமனாக இருப்பது (உடல் எடையை விட 20% அல்லது அதற்கு மேற்பட்ட எடை இருத்தல்)
*நீரிழிவுநோயின் குடும்ப வரலாறு.
*முந்தைய பிரசவத்தில் 4 கிலோவிற்கு மேல் இருந்த குழந்தையின் எடை
*முந்தைய குறை பிரசவம்
*தற்போதைய கர்ப்பத்தில் மீண்டும் மீண்டும் யோனித் தொற்று நோய்
*அதிகப்படியான பனிக்குட நீர் (அம்னோடிக் திரவம்)
*கர்ப்பிணியின் வயது 30ஐத் தாண்டி இருத்தல்
பெண்ணின் உடலில் உள்ள கணையம் சுரக்கும் இன்சுலின் எனும் ஹார்மோன், வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்காக, நஞ்சுப்பையில் சுரக்கும் சில ஹார்மோன்களின் எதிர் வேலையால் சரியாக வேலை செய்யாமல் போவதால் தற்காலிகமாக சர்க்கரை அதிகரிக்கிறது. இது மேலே கூறிய ஆபத்து உள்ளவர்களுக்கும் மற்றும் ஏற்கெனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கும் கர்ப்பகால நீரிழிவு நோயாகவே மாறிவிடுகிறது. இதை கர்ப்பிணிகளுக்கு வரும் நீரிழிவு நோய் என்கிறோம்.
அறிகுறிகள்
கர்ப்பகால நீரிழிவு அறிகுறிகள் ஆரம்பத்தில் தெரிவதில்லை அப்படியே தெரிந்தாலும் அவை பொதுவாக மிதமானதாக இருக்கும் அறிகுறிகள் உருவாகுவதற்கு முன்பு ஆரம்பகால வழக்கமாக பரிசோதனைகளிலேயே (ஸ்கிரீனிங்) இந்தநிலை கண்டறியப்பட்டு விடுகிறது. இருப்பினும், நீரிழிவு நோய் கண்டறியப்படாவிட்டால் அல்லது சிகிச்சையளிக்கபடாவிட்டால், கீழேயுள்ள அறிகுறிகள் உருவாகலாம்.
*அதிக சிறுநீர் கழித்தல்
*அதிக தாகம்
* அதிக பசி
*எடை குறைவு
* குமட்டல்
*வாந்தி
* சோர்வு
*சிறுநீர்ப்பாதை, சிறுநீர்ப்பை, யோனியில் தொற்றுநோய்.
ஆயுர்வேதத்தில் நீரிழிவு மற்றும் கர்ப்பகால நீரிழிவு
இந்நிலையை ஆயுர்வேதம் மதுமேகம் என்றும், நோயாளியை மதுமேகி என்றும் குறிப்பிடுகிறது.நீரிழிவு நோய் கி.மு.1500 வருடங்களுக்கு முன்பே, ஆயுர்வேதம் அறிந்த நோய், பிரமேஹம் என்ற பெயரில் இந்நோய் 20 வகைகளாக சரகசம்ஹிதையில் விவரிக்கப்பட்டிருக்கிறது. இதில் மதுமேகம் என்பது நீரிழிவு நோயைக் குறிக்கும். நீரிழிவின் காரணங்கள் அறிகுறிகள், தவிர நீரிழிவு வளர்சிதை மாற்றக் கோளாறினால் வருகிறது (மெட்டபாலிக் டிஸ்ஆர்டர்) என்ற கருத்துகள் 3500 வருடங்களுக்கு முன்பே நமது ஆயுர்வேத மருத்துவர் அறிந்திருந்தார்கள். சரக சம்ஹிதையில் மதுமேகத்தின் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சைமுறைகள் விவரமாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த உண்மைகள் தற்போது அறிவியல் மூலம் நாம் அறியும் விவரங்களுக்கு
ஈடானது.
*கர்ப்பகால நீரிழிவால் தாய்மார்களுக்கு வரும் ஆபத்துகள்
*தொடர்ச்சியாக தன்னிச்சையான கருக்கலைப்பு – குறை பிரசவம்
*கர்ப்பிணிகளுக்கு பல் மற்றும் ஈறுகளில் பிரச்னை, உடல் எடை அதிகரிப்பு, கை கால்களில் வீக்கம்.
*ப்ரி – எக்லாம்ப்சியா, எக்லாம்ப்சியா – பேறுகால ஜன்னி, சினைப்பருவ வலிப்பு நோய்
*சிறுநீரகச் செயலிழப்பு
*கண் பார்வை பாதிப்பு (ரெட்டினோபதி)
*கெட்டோ அசிடோசிஸ்
*சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று அதிகரிக்கும் ஆபத்து
*கர்ப்பகால நீரிழிவு நோயாளிகளுக்கு டாக்ஸீமியா என்னும் நச்சுத்தன்மை வருவதற்கு இயல்பைவிட அதிகமாக வாய்ப்பு உள்ளது. இது தாய் மற்றும் குழந்தை இருவர் உயிருக்கும்
பேராபத்து தரும்.
பிரசவத்தின்போது
*சிசேரியன் மற்றும் அறுவை சிகிச்சை செய்யும் சூழ்நிலை
*மலவாய் சுற்றி (பெரியனல்) காயங்கள்
*காலம் கடந்து நீடிக்கும் பிரசவ வலி.
*கர்ப்பப்பையில் சிசுவின் நிலைமாறிப்போய் பிரசவத்தில் சிக்கல்
பிரசவத்திற்கு பிறகு
*மகப்பேறுக்கு பின் ஏற்படும் ரத்தக்கசிவு
*பிரசவத்திற்குப் பிறகு (பியூர்பரல்) வரும் தொற்று நோய்,
*பால் சுரத்தலில் தோல்வி.
குழந்தைக்கு வரும் ஆபத்து
குழந்தைக்கு மிகவும் குறைந்த ரத்தத்தின் சர்க்கரை அளவு. இது கவனிக்கப்படாவிட்டால் குழந்தை இறந்தும் போகலாம்.
குழந்தைக்கு மஞ்சள் காமாலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.பிறவி பிரச்னைகளான மூளை மற்றும் இதயக் குறைபாடு சிறுநீரகம் அல்லது சுவாசக் கோளாறு.
இரண்டாவது மற்றும் மூன்றாவது மூன்று மாதங்களில் குழந்தையின் அதிகப்படியான வளர்ச்சி, ஒரு பெரிய குழந்தையைப் பெற்றிருப்பது, பிரசவத்தின்போது அபாயங்களை அதிகரிக்கும். மேலும் இப்படி பெற்றெடுக்கப்பட்ட குழந்தைகள் தங்கள் பிற்கால வாழ்க்கையில் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயால் அவதிப்படக்கூடும்.
ஆயுர்வேத சிகிச்சை
ஆயுர்வேதம், ஒரு பெண்ணின் முழு வாழ்க்கையிலும் கவனம் செலுத்துகிறது. இது கர்ப்பகாலத்தில் கர்ப்பம் தொடர்பாக சிக்கல்களைக் குறைக்க உதவுகிறது. பலவகையான மூலிகைகள் உணவு மாற்றங்கள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் திரிதோஷங்களான முக்குற்றங்களை சமநிலைக்குக் கொண்டு வந்து கர்ப்பகாலத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
உணவு மாற்றங்கள் மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகளால் இதனை சரி செய்ய முடியாத போது, ஆயுர்வேதம் மருந்துகள் பரிந்துரைக்கிறது.கர்ப்பகால நீரிழிவு நோயைக் கையாள்வதற்கான வாழ்க்கைமுறை மாற்றங்கள் கர்ப்பகாலம் முழுவதிலும் மற்றும் பிரசவத்திற்கு பின்னும் சர்க்கரை அளவை முறையாக கவனத்துடன் கண்காணிக்க வேண்டும். நாம் சாப்பிடும் மற்றும் குடிக்கும் அனைத்தும் நம் ரத்த சர்க்கரை அளவை பாதிக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
நீரிழிவு நோய் இருப்பது கண்டறிப்பட்டால், தகுதி வாய்ந்த மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் அறிவுரையை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.நீரிழிவு நோயைக் குணப்படுத்துவதற்கான முக்கிய உணவாக பார்லி கருதப்படுவதால் உணவில் பார்லி உட்கொள்வதை அதிகரிக்கவும்.சீனி, சர்க்கரை, கருப்பட்டி போன்ற இனிப்புகளையும் இனிப்பு பலகாரங்களையும் தவிர்க்க வேண்டும்.
பழங்களை பழச்சாறுகளாக பருகாமல் அப்படியே கடித்து உண்ண வேண்டும்.அதிகமான நார்ச்சத்து உள்ள கீரைகள், காய்கள் (குறிப்பாக பந்தல் வகை காய்கள், பாகற்காய், வெந்தயம், சீரகம், சோம்பு, மஞ்சள், சுக்கு, திப்பிலி ஆகியவை அடிக்கடி உணவில் சேர்க்கலாம்.தானிய உணவுகள், கிழங்கு மற்றும் வேர்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அரிசிக்குப் பதிலாக கோதுமை, கேழ்வரகு சேர்த்துக் கொள்ள வேண்டும்.ஒரு சிறிய ஆப்பிள், கொய்யா, மாதுளை, பேரிக்காய் இவற்றில் ஒன்றை சாப்பிடலாம்.
வறுத்த, பொரித்த உணவுகளையும் கொழுப்பு நிறைந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
உணவை சிறிய இடைவெளிகளில் சிறிது சிறிதாக அடிக்கடி சாப்பிட்டுக் கொள்ளலாம்.குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள், மைதா, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், பிஸ்கட், வடை, பஜ்ஜி, சமோசா, கேக் போன்றவற்றை தவிர்க்கலாம்.
தினமும் அரைமணி நேரமாவது நடைப்பயிற்சி மற்றும், 20 நிமிடம் மூச்சுப் பயிற்சி செய்யலாம்.தினமும் 9 மணிநேரம் உறக்கம் தேவை – உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக கர்ப்ப காலத்தில் சோர்வு ஏற்படுவது மிகவும் பொதுவானது. நல்ல உறக்கம் சோர்வை நீக்கும்.மனம் அமைதி தரும் பிராணயாமம், யோகாசனம் மற்றும் தியானமும் நன்மை பயக்கும்.
ஆயுர்வேத மருந்துகள்
ஆயுர்வேதத்தில் பிரசித்தி பெற்ற மருந்துகளான நிஷாகதகாதி கஷாயம், கதககதிராதி கஷாயம், திரிபலா சூர்ணம், நிஷாமலகி சூர்ணம், தன்வந்தரம் கிருதம், அசனாதி க்வாதம், சந்திரபிரபாவடி, ஷிலாஜத்து வடி ஆகியவை தகுதி வாய்ந்த மருத்துவரின் அறிவுரையில் கொடுக்க நல்ல பலனைத் தரும்.
No comments:
Post a Comment