Join THAMIZHKADAL WhatsApp Groups
பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளையுடன் (மார்ச் 22) நிறைவு பெறுகிறது. தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 1-ம் தேதிமுதல் தொடங்கவுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழ், கணிதம், இயற்பியல் உள்ளிட்ட பெரும்பாலான பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துவிட்டன. நாளையுடன் (மார்ச் 22) பிளஸ்-2 பொதுத் தேர்வு நிறைவு பெறுகிறது. நிறைவு நாளில் உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், ஜவுளி தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன.
இதையடுத்து விடைத்தாள் திருத்துதல் பணிகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
பொதுத்தேர்வு முடிந்ததும் மார்ச் 23-ம் தேதி முதல் மாணவர்களின் விடைத்தாள்கள் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கிருந்து திருத்துதல் முகாம்களுக்கு விடைத்தாள்கள் மார்ச் 28-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து ஏப்ரல் 1 முதல் 13-ம் தேதி வரை திருத்துதல் பணிகள் நடைபெற உள்ளன.
இதற்காக தமிழகம் முழுவதும் 83 தேர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 6-ல் வெளியிடப்படும். திருத்துதலின் போது ஆசிரியர்கள் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
கணித தேர்வில் தவறான கேள்வி:
இதுவரை தமிழ், கணிதம், விலங்கியல் உட்பட பல்வேறு பாடங்களுக்கான தேர்வுகள் முடிவடைந்துள்ளன. அதற்கான விடைக்குறிப்பு தயாரிக்கும் பணி நடக்கிறது. இதற்கிடையே பிளஸ் 2 மாணவர்களுக்கு கணிதப் பாடத்தேர்வு மார்ச் 19-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கணித தேர்வு வினாத்தாளில் இடம்பெற்ற 5 மதிப்பெண் கேள்வி ஒன்று தவறாக இருப்பதாகவும், அதற்கு கருணைமதிப்பெண் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து அரசுப் பள்ளி கணித ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, “பிளஸ் 2 பொதுத் தேர்வு கணித வினாத்தாளில் 5 மதிப்பெண் வினாவில் இடம்பெற்ற 47-ஏ கேள்வி தவறாக உள்ளது. அதில் வலது புறத்தில் உள்ள மறைமுக குறியீடு பாடப்புத்தகத்தில் உள்ளதைவிட முழுவதும் வேறுபட்டதாக உள்ளது. இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். அதேபோல், ஒரு மதிப்பெண் வினாவில் 17-வது கேள்வியில் அ, இ ஆகிய விடைகள் பொருந்துவதாக உள்ளன. இவ்விரண்டுக்கும் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்” என்றனர்.
No comments:
Post a Comment