அரசுப் பள்ளிகளில் 2024-25 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான தொடக்க விழா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கி நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார். வழக்கத்தைவிட இந்த முறை ஒரு மாதத்துக்கு முன்னதாகவே மாணவர் சேர்க்கை தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையொட்டி புதிதாக அரசுப் பள்ளியில் சேர்ந்த மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்ற அமைச்சர், அவர்களுக்கான சேர்க்கை விண்ணப்பப் படிவத்தை வழங்கி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். முன்னதாக மார்ச் 1-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக ‘குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்போம், எதிர்காலத்தை வளமாக்குவோம்’ என்ற வாசகங்கள் இடம்பெற்ற விழிப்புணர்வு வாகனத்தையும் தொடங்கி வைத்தார்.
அதேபோல அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை துண்டுப் பிரசுரங்களாக அச்சடித்து விழிப்புணர்வு பேரணி மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்து. அதன் அடிப்படையில் அரசுப் பள்ளியின் திட்டங்களைக் கொண்ட துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன், தொடக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசுப் பள்ளிகளில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.6.26 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கை:
தமிழகத்தில் 2024-25-ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை பணிகளுக்காக 38 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட அலுவலகத்தின் மூலம் ஒரு பள்ளிக்கு ரூ.2,000 வீதம் மொத்தமாக 31,330 பள்ளிகளுக்கு ரூ.6.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மாணவர் சேர்க்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்துதல், தொடக்கக் கல்வி பதிவேட்டைப் புதுப்பித்தல், அரசுப் பள்ளிகளில் தரமான இலவசக் கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அறியும் வண்ணம் சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் களுக்கும் உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுஉள்ளது.
No comments:
Post a Comment