Join THAMIZHKADAL WhatsApp Groups
தேர்தலில் வாக்காளர்களுக்கு புகைப்பட வாக்காளர் சீட்டு வழங்குவதற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்குவது என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு முன்பாக வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும். அளிக்க இயலாதவர்கள், ஆதார் உள்ளிட்ட 12 அடையாள ஆவணங்களை காண்பிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக புகைப்பட வாக்காளர் சீட்டுக்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டை அச்சிட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. வாக்காளர் தகவல் சீட்டில் வாக்குச் சாவடியின் பெயர், வாக்குப் பதிவு நாள், நேரம் போன்றவை இடம் பெற்றிருக்கும். மாவட்ட தேர்தல் அலுவலரால் வாக்குப் பதிவு நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பாக அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கப்படும்.
வாக்குச் சாவடியில் வாக்காளர் தகவல் சீட்டு, அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது. ஒரு வாக்காளர் வேறொரு சட்டப்பேரவை தொகுதியின் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தால், அந்த அடையாள அட்டையையும் ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச் சாவடிக்குரிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட 12 அடையாள ஆவணங்களில் ஒன்றை வைத்திருப்பதால் மட்டுமே ஒரு வாக்காளர் தனது வாக்கைச் செலுத்தி விட முடியாது. அவருடைய பெயர் வாக்குச் சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே அவர் வாக்குரிமையைச் செலுத்த தகுதியுடையவர் ஆவார்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment